Saturday, July 4, 2026
Homeஇளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை வலியுறுத்தும் ‘மாறா’ – ஆஸ்ட்ரோ மற்றும் MCMC இணைந்து விழிப்புணர்வு...

இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை வலியுறுத்தும் ‘மாறா’ – ஆஸ்ட்ரோ மற்றும் MCMC இணைந்து விழிப்புணர்வு முயற்சி

சமூக வலைத்தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஆஸ்ட்ரோ மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) இணைந்து புதிய விழிப்புணர்வு முயற்சியை முன்னெடுத்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக, ‘மாறா’ என்ற விறுவிறுப்பான தமிழ் டெக்னோ-திரில்லர் தொடர் ஜூலை 6ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா தளங்களில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் கூறுகையில், உள்ளூர் தமிழ் உள்ளடக்கங்களை மேம்படுத்துவதற்கும் புதிய திறமைகளுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஆஸ்ட்ரோ தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

“பொழுதுபோக்கை மட்டுமல்ல, சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு சக்தியாகவும் உள்ளடக்கங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ‘மாறா’ தொடரின் மூலம் சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு, இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பொறுப்புணர்வு போன்ற முக்கியமான விஷயங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறோம்,” என்றார் அவர்.

இதனிடையே, MCMC வெளியிட்ட அறிக்கையில், இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் முயற்சிகளில் தாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடையே பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை ஊக்குவிப்பது எங்களின் முக்கிய இலக்காகும். சமூக அடிப்படையிலான திட்டங்கள் மற்றும் பல்வேறு கூட்டாண்மைகள் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருது பெற்ற இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ஜெயமூர்த்தி (ஜெபி) இயக்கி தயாரித்துள்ள ‘மாறா’, சமூக ஊடகப் புகழைத் தேடி செல்லும் 19 வயது பல்கலைக்கழக மாணவி மறகதவல்லியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.

பிரபல இன்ஃப்ளூவன்சராக மாற வேண்டும் என்ற ஆசையில், அவள் ஒவ்வொரு கட்டத்திலும் நெறிமுறை எல்லைகளை மீறத் தொடங்குகிறாள். வைரலாக வேண்டும் என்ற நோக்கில் தனது மாற்றுத்திறனாளி சகோதரியையே பயன்படுத்தும் அவள், பின்னர் பழிவாங்கும் நோக்கில் மற்றொருவரின் தனிப்பட்ட காணொளியையும் வெளியிடுகிறாள். அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள், சமூக ஊடகங்களில் பொறுப்பின்றி செயல்படுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

டிஷாலனி ஜாக், புனிதா சண்முகம், திவ்யா கியா, சத்யா காந்தி மற்றும் கே. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபல உள்ளூர் நட்சத்திரங்கள் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மாறா’, சமூக ஊடகப் புகழுக்காக எடுக்கப்படும் தவறான முடிவுகள் நிஜ வாழ்க்கையில் எவ்வாறு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

MCMC-இன் ‘பாதுகாப்பான இணையம்’ பிரச்சாரத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பச்சாதாபம், தனியுரிமை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான இணைய நடத்தை போன்ற மதிப்புகளை வலியுறுத்துவதுடன், இன்றைய டிஜிட்டல் தலைமுறைக்கு மிகவும் அவசியமான விழிப்புணர்வையும் வழங்குகிறது.

RELATED ARTICLES

Most Popular