Saturday, October 24, 2026
spot_img
HomeBusinessதீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த நகைச்சுவை நிகழ்ச்சி; சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், ஆதரவற்ற பெரியவர்களுக்கு விருந்து!

தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த நகைச்சுவை நிகழ்ச்சி; சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், ஆதரவற்ற பெரியவர்களுக்கு விருந்து!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெரியவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு நகைச்சுவை நிகழ்ச்சியுடன் கூடிய சிறப்பு விருந்தை மோஜோ புராஜெக்ட்ஸ் (Mojo Projects) மற்றும் மலேசிய இந்திய சமூக மையம் (MICC) இணைந்து ஏற்பாடு செய்தன.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மெனாரா BAC, ஓம்னியா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞர் பிரவீன் குமாரின் ‘நானும் ஃபுடீ தான்’ (Naanum Foodie Dhaan) என்ற நகைச்சுவை நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதில், KIRTARSH இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெரியவர்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு உணவு மற்றும் பரிசுப் பைகள் வழங்கப்பட்டதுடன், பிரவீன் குமாரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. மோஜோ புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான ரத்னா கே. நடராஜனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

இது குறித்து ரத்னா கே. நடராஜன் கூறுகையில், தீபாவளியின்போது மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதுடன், அவர்கள் மகிழ்ச்சியடையும் அனுபவங்களையும் வழங்குவது முக்கியம் என்றார்.

மேலும், ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகத் தங்களால் பகிர்ந்துகொள்ளக்கூடிய மகிழ்ச்சியை, ஆதரவாளர்களின் உதவியுடன் KIRTARSH குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு PureSaiva, Harekrishna Textiles மற்றும் Goodday Milk ஆகிய நிறுவனங்கள் ஆதரவு வழங்கின. மோஜோ புராஜெக்ட்ஸின் மூலோபாயக் கூட்டாளியான DNA Creative Communications நிறுவனமும் கூடுதல் ஆதரவு மற்றும் அனுசரணையை வழங்கியது.

உணவின் வழியாக நகைச்சுவை!

பிரவீன் குமாரின் நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறுவயது உணவுகள், வீட்டில் தயாரிக்கப்படும் பிரியாணி, உணவகங்களில் வழங்கப்படும் வித்தியாசமான உணவுகள், உணவு விநியோகச் செயலிகள் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நகைச்சுவையுடன் எடுத்துரைக்கப்பட்டன.

தமிழ் மொழி விளையாட்டுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் மூலம் உணவு என்பது வெறும் பசியைப் போக்கும் ஒன்றல்ல; அது நினைவுகள், அன்பு மற்றும் குடும்பப் பாசத்துடன் தொடர்புடையது என்பதையும் அவர் நகைச்சுவையாக வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, தமிழர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் வகையில் வழக்கமாகக் கேட்கப்படும் “சாப்பிட்டியா?” என்ற கேள்வியையும் தனது நிகழ்ச்சியில் நகைச்சுவையுடன் இணைத்திருந்தார்.

இதற்கு முன்னதாக, பிரவீன் குமாரின் ‘Family Man Returns’ நிகழ்ச்சியையும் மோஜோ புராஜெக்ட்ஸ் வழங்கியிருந்தது. அந்த நிகழ்ச்சி குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ‘நானும் ஃபுடீ தான்’ நிகழ்ச்சி உணவு, உணவுப் பழக்கங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டிருந்தது.

பொழுதுபோக்குடன் சமூக அக்கறையையும் இணைத்து நடைபெற்ற இந்த முயற்சி, தீபாவளிக் கொண்டாட்டத்தில் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெரியவர்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Most Popular