
இந்தியப் பிரஜைகளுக்கு மலேசியா வழங்கி வரும் 30 நாட்கள் விசா இல்லா நுழைவு அனுமதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (MATTA) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்த விசா விலக்கு சலுகை, 2026 டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இச்சலுகை முடிவுக்கு வந்தால், மலேசியாவின் சுற்றுலாத்துறை, விமானப் போக்குவரத்துத் தொடர்புகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் என MATTA எச்சரித்துள்ளது.
2023ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியர்களுக்கான விசா விலக்கு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் 773,221 ஆக இருந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் சுமார் 14 லட்சமாகவும், 2025ஆம் ஆண்டில் 16 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் மட்டும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மூலம் சுமார் RM14.8 பில்லியன் சுற்றுலா வருவாய் கிடைத்துள்ளதாக MATTA தெரிவித்துள்ளது.
இதுகுறித்து MATTA தலைவர் நைகல் வோங் கூறுகையில், இந்தியா மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஒன்றாகும்.
“இந்தியர்களுக்கான விசா விலக்கு சலுகையை தற்போதே முடிவுக்குக் கொண்டுவருவது, இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மலேசியா இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடும். இதன் தாக்கம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுயதொழில் புரிவோர் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளின் செலவினங்களை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும்,” என்றார்.
மேலும், புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் காரணமாக விமானப் போக்குவரத்துத் தொடர்புகள் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களிடமிருந்து மலேசியா அதிக போட்டியையும் சந்தித்து வருகிறது.
விசா விலக்கு சலுகை நிறுத்தப்பட்டால், இந்தியர்கள் விசா பெறுவதற்கான கூடுதல் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் பயண ஆர்வம் குறைவதுடன், மலேசியாவுக்கான விமானச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் விமான நிறுவனங்களுக்கு சவால்கள் ஏற்படலாம் என MATTA சுட்டிக்காட்டியுள்ளது.
குடும்பச் சுற்றுலா, குழுப் பயணங்கள், வர்த்தக நிகழ்வுகள் மற்றும் இலக்கு திருமண நிகழ்ச்சிகள் போன்ற உயர்மதிப்புள்ள சுற்றுலாப் பிரிவுகளுக்கும் எளிதான நுழைவு நடைமுறை முக்கியமானது என நைகல் வோங் குறிப்பிட்டார்.
“குடும்பங்கள், சுற்றுலாக் குழுக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது பயண இலக்கைத் தீர்மானிக்கும்போது விமானக் கட்டணம், பயணச் செலவு மற்றும் நுழைவு விதிமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்கின்றனர். எனவே, விசா விலக்கு சலுகையை நீட்டிப்பது மலேசியாவின் போட்டித்தன்மையைத் தக்கவைக்க உதவும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் என்பதை MATTA ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, விசா விலக்கு சலுகையை நீட்டிப்பதுடன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள், கண்காணிப்பு மற்றும் ஆபத்து அடிப்படையிலான அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என MATTA பரிந்துரைத்துள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை நிலவரம், குடியேற்ற விதிமுறை இணக்கம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அது வலியுறுத்தியுள்ளது.
மலேசியாவின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளையில், தேசியப் பாதுகாப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு மதிப்பளித்து அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்பட MATTA தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


