
35ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் (FFM 35) மலேசியத் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளமை, உள்ளூர் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் படைப்பாற்றலுக்கும் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

இதனைப் பாராட்டிய தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங், மலேசியத் தமிழ் திரைப்படத் துறையில் திறமையான கலைஞர்களும் தரமான படைப்புகளும் தொடர்ந்து உருவாகி வருவதற்கு இந்த வெற்றிகள் சான்றாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த விழாவில், ‘மச்சாய்’ (Macai) திரைப்படத்திற்காக சஞ்சேய் பெருமாள் மற்றும் சிவானந்தம் ஆகியோர் சிறந்த அசல் கதை விருதைப் பெற்றனர். அதே திரைப்படத்தில் நடித்த குபேன் மகாதேவன், தனது திரைப்பயணத்தில் முதன்முறையாக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று கவனம் ஈர்த்துள்ளார்.

அதேவேளையில், மலேசியத் திரைப்படத் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்களித்து வரும் பஞ்சாச்சரம் பி. நல்லையா, ‘சுகன் பஞ்சாச்சரம்’ என்ற பெயரில் அறியப்படும் நிலையில், அவரது நீண்டகால சேவையைப் பாராட்டி சிறப்புக் கலைஞர் விருது வழங்கப்பட்டது.
மேலும், சஞ்சேய் பெருமாள் எழுதி இயக்கிய ‘ப்ளூஸ்’ (Blues) திரைப்படத்தின் சிறந்த திரைப்படச் சுவரொட்டி விருதை ஸ்கைசென் ஸ்டுடியோஸ் (Skyzen Studios) கைப்பற்றியது.
இந்த வெற்றிகள் தனிநபர்களின் சாதனைகளாக மட்டும் கருதப்படக் கூடாது என்றும், மலேசியத் தமிழ் திரைப்படத் துறையில் மறைந்திருக்கும் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்துள்ளதாகவும் தியோ தெரிவித்தார்.
மேலும், இத்தகைய அங்கீகாரங்கள் புதிய கலைஞர்கள் தரமான திரைப்படங்களை உருவாக்குவதற்கும், மலேசியாவின் கலை மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பதற்கும் ஊக்கமளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, 35ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் ‘கடம்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதுடன், படைப்பாக்க உள்ளடக்க நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரி.ம.1 மில்லியன் ஊக்கத்தொகை உட்பட மொத்தம் 10 விருதுகளைக் கைப்பற்றி விழாவின் முக்கிய வெற்றியாளராகத் திகழ்ந்தது.
கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங், விருதுகளை வென்ற கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, மலேசியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் அனைத்துக் கலைஞர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.


