Friday, November 20, 2026
spot_img
HomeBusinessஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கு மலேசியா செல்ல விசா கட்டாயம்!

ஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கு மலேசியா செல்ல விசா கட்டாயம்!

டிசம்பர் 31-ஆம் தேதியுடன் 30 நாள் விசா விலக்கு சலுகை நிறைவு – MyVISA மூலம் டிசம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு விசா இன்றி பயணம் செய்ய இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாள் விசா விலக்கு சலுகை, வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2027 ஜனவரி 1 முதல் இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள செல்லுபடியாகும் விசாவைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வருகை தரும் பயணிகளை மேலும் விரிவான பாதுகாப்பு மற்றும் குடிநுழைவுச் சோதனைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியப் பயணிகள் தங்களது விசா விண்ணப்பங்களை டிசம்பர் 1 முதல் மலேசியக் குடிநுழைவுத் துறையின் MyVISA இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கடந்த நவம்பர் 17-ஆம் தேதி குடிநுழைவுத் துறை வெளியிட்டிருந்தது.

எனினும், தற்போதைய விசா விலக்கு சலுகை டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அதனை மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக புதுடெல்லியில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே, 2027 புத்தாண்டு முதல் மலேசியாவுக்கு வரத் திட்டமிடும் இந்தியப் பயணிகள், விசா நடைமுறைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular