
கோலாலம்பூர்: மார்க்கெட்டிங் துறையில் தனது சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் மலேசியா ஏர்லைன்ஸ், Marketing Excellence Awards Malaysia 2026 விருது விழாவில் மூன்று முக்கிய விருதுகளை வென்று மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது.

இவ்விருது விழாவில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இரண்டு வெள்ளி விருதுகளையும் ஒரு வெண்கல விருதையும் தனதாக்கியுள்ளது.
அந்த வகையில்,
- வெள்ளி விருது: ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் குழு (Marketing Team of the Year).
- வெள்ளி விருது: சிறந்த தொலைக்காட்சி மற்றும் காணொளி விளம்பரம் – உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட ‘Pilot Parker: A Story Inspired by True Memorable Moments’ விளம்பரப் படைப்பு.
- வெண்கல விருது: சந்தைப்படுத்தல் புத்தாக்கத்தில் சிறப்பு – ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இயங்கும் விமானப் பணிப்பெண் அறிமுகமான ‘MAYA’ திட்டம்.
இந்த விருதுகள் மலேசியா ஏர்லைன்ஸ் குழுவினரின் கூட்டு முயற்சி, படைப்பாற்றல் மற்றும் புதிய சிந்தனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கதையம்சம் நிறைந்த விளம்பரங்கள், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன சந்தைப்படுத்தல் அணுகுமுறைகள் மூலம் மக்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதுடன், சர்வதேச சந்தையில் தனது வர்த்தக முத்திரையின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் சிறந்த 10 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கும் தனது Destination 2030 இலக்கை நோக்கி மலேசியா ஏர்லைன்ஸ் பயணித்து வருகிறது.
இதற்காக பாரம்பரிய அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்தல், புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உலக அரங்கில் மலேசிய விருந்தோம்பல் பண்பாட்டை (Malaysian Hospitality) சிறப்பாக வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் நிறுவனம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வர்த்தகப் பங்காளிகள், குழுவினர் மற்றும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் பயணிகள் அனைவருக்கும் மலேசியா ஏர்லைன்ஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று விருதுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் மலேசியா ஏர்லைன்ஸின் பிராண்ட் மதிப்பையும் சந்தைப்படுத்தல் திறனையும் மேலும் உயர்த்தும் முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளன.


