
கூச்சிங், நவம்பர் 18, 2026: சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, உயர்தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சரவாக் மாநிலத்துடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, இந்தியா தனது மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ளது.
மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் சோம்நாத் கோஷ், சரவாக் மாநிலத்தில் இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியர்கள் சரவாக்கில் வேலைவாய்ப்புகளைப் பெறவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் முடியும் என்பதுடன், இந்திய சுற்றுலாப் பயணிகளும் சரவாக்கை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக ஆராயலாம் என்றார்.
மேலும், தற்போது உருவாக்கப்பட்டு வரும் தொழில்துறை பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.
சரவாக் மாநிலத் தலைவர் துன் பெஹின் ஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபாரை கூச்சிங்கில் உள்ள அஸ்தானா நெகிரியில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சரவாக் இடையே நீண்டகால நட்புறவு நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தனது பதவிக்காலத்தில் மாநில நிர்வாகம் மற்றும் மக்களுடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்தியா மற்றும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் வனவளங்களைச் சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளில் பல்வேறு ஒற்றுமைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு பகுதிகளிலும் உள்ள பெண்கள் தேன், மூங்கில், மூலிகைகள் உள்ளிட்ட வனப் பொருட்களைச் சேகரிப்பதன் மூலம் குடும்பப் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றி வருகின்றனர் என்றார்.
இந்தியாவில் 12.5 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியினப் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 4,000-க்கும் மேற்பட்ட வன சுகாதார மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பெண்களுக்கும் உரிய குரலும் பங்களிப்பும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கூச்சிங்கில் நடைபெற்ற முதலாவது தெற்காசிய அனைத்துலக மகளிர் பேரவை (SAIWA) 2026 தொடக்க விழாவில் உரையாற்றியபோதே அவர் இக்கருத்துகளை முன்வைத்தார். இந்நிகழ்ச்சியை சரவாக் மாநில மகளிர், ஆரம்பகால குழந்தைப் பருவம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை பொறுப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாத்திமா அப்துல்லா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கைப் பயணத்தைச் சுட்டிக்காட்டிய அவர், கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பெண்களும் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து உயர்ந்த தலைமைப் பொறுப்புகளை அடைய முடியும் என்பதற்கு அது சிறந்த முன்னுதாரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்திய உயர் ஆணையரின் சரவாக் பயணம், இரு தரப்புக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் பெண்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


