
கோலாலம்பூர்: மலேசியாவின் சுற்றுலா, பாரம்பரியம் மற்றும் உள்ளூர் உணவுக் கலாசாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், மலேசியா சுற்றுலாவும் உள்நாட்டு காபி வர்த்தக நிறுவனமான ZUS COFFEE-யும் இணைந்து ‘Inilah Malaysia’ எனும் புதிய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.

2026–2027 மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டுப் பிரசாரத்தின் (Visit Malaysia 2026–2027) ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதுடன் உள்ளூர் வணிகம் மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும்.

இந்தப் பிரசாரத்தின் சிறப்பம்சமாக, ZUS COFFEE-யின் Gula Melaka Latte பானம் ‘The Malaysian Latte’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மலேசியர்கள் தங்களது MyKad அட்டையையும், வெளிநாட்டுப் பயணிகள் கடவுச்சீட்டையும் காண்பித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ZUS COFFEE கிளைகளில் RM6.90 சிறப்பு விலையில் இப்பானத்தைப் பெறலாம். இந்தச் சலுகை 2026 டிசம்பர் 31ஆம் தேதி வரை வழங்கப்படும்.
மேலும், Kopi O, Kopi Cham, Kopi Coklat மற்றும் White Coffee உள்ளிட்ட உள்ளூர் சுவைகளைக் கொண்ட ZUS NGUPI உடனடி காபி வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மலேசியாவின் பாரம்பரியக் கலை மற்றும் இயற்கை வளங்களைப் பிரதிபலிக்கும் வகையில், Wau Bulan, Songket, மரச் செதுக்குக் கலை மற்றும் பாரம்பரிய நெசவு வடிவங்களுடன் கூடிய ZUS Lifestyle சிறப்புத் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது.
இதனுடன், நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ZUS COFFEE கிளைகளுக்குச் சென்று முத்திரைகளைச் சேகரிக்கும் ‘ZUS Stamp Journey’ திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு இலவச Malaysian Latte வழங்கப்படும்.
அதேவேளை, Mono Malaysia உடன் இணைந்து ‘Wajah-wajah Malaysia’ எனும் நான்கு பகுதிகளைக் கொண்ட சமூகத் தொடர் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலேசிய மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், கலாசாரம் மற்றும் சமூகக் கதைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையில், 2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மலேசியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 28.8 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.8 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 151.6 மில்லியனாக உயர்ந்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.6 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
‘Inilah Malaysia’ பிரசாரம் நாடு முழுவதும் 2026 டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் மூலம் மலேசியாவின் உணவு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் தலங்களை அன்றாட அனுபவங்கள் வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.


