
மதுபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர்.யுனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்த அவர், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்களுக்கு காரணமாகும் நபர்களுக்கு கட்டாய சிறைத்தண்டனை விதிப்பதுடன், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஆயுள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், சாலைப் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்து, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக மேலும் தெளிவான மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் தாக்கத்திலோ வாகனம் ஓட்டுவது சாதாரண போக்குவரத்து குற்றமல்ல; அது பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தல்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யும் நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய கடைகள் மூடப்படுவதுடன், வணிக உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மதுபான விற்பனை நேரத்தை மறுபரிசீலனை செய்து, 24 மணி நேர விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் சாலைத் தடுப்பு சோதனைகள் மற்றும் பெரிய அளவிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஜாலான் அம்பாங் பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர் மோதியதில் உயிரிழந்த தம்பதியரான துரைசிங்கம் மற்றும் மேனகா குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
“இத்தகைய சம்பவங்கள் தனித்தனி விபத்துகளாக கருதப்படக்கூடாது. இன்று உள்ள அமலாக்க பலவீனம் நாளை மேலும் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கலாம்,” என அவர் எச்சரித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நாட்டின் மக்கள் பாதுகாப்பே அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

