
தேசிய விளையாட்டு விருதுகள் 2025 நிகழ்வில் தேசிய விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டது, அவர்கள் பெற்ற வெற்றிகளையும் சாதனைகளையும் மட்டுமல்லாமல், நாட்டிற்காக அவர்கள் செய்த தியாகம், ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியையும் பாராட்டும் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஒவ்வொரு பதக்கத்தின் பின்னாலும் கடின உழைப்பு, வியர்வை, கண்ணீர் மற்றும் எண்ணற்ற தியாகங்கள் மறைந்துள்ளன. உலக அரங்கில் மலேசியாவின் பெருமையை உயர்த்திய வீரர்கள், விளையாட்டு துறையை மட்டுமல்லாமல் தேசிய ஒற்றுமை மற்றும் உறுதியின் அடையாளங்களாகவும் திகழ்கின்றனர் என்றார்.இன, மத, மொழி வேறுபாடுகள் நிறைந்த உலகில், விளையாட்டு மக்கள் அனைவரையும் ஒரே மனதுடன் இணைக்கும் சக்தியாக உள்ளது. மலேசியா போட்டி அரங்கில் களமிறங்கும் போது, அனைத்து மக்களும் ஒரே உணர்வுடனும் ஒரே நம்பிக்கையுடனும் நாட்டை ஆதரிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டு என்பது சமூகத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்று என்றும், மக்களின் பங்கேற்பிலிருந்தே ஒரு நாட்டின் வலிமையும் சிறப்பும் உருவாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.நாடு தற்போது பொருளாதார சவால்களை எதிர்கொண்டாலும், மடானி அரசாங்கம் விளையாட்டு வளர்ச்சிக்கும் வீரர்களின் நலன்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

தேசிய விளையாட்டு விருதுகளை பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், தொடர்ந்து நாட்டிற்காக போராடி வரும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அவர் பாராட்டினார். மக்களின் ஆதரவு எப்போதும் அவர்களுடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

