Friday, July 24, 2026
HomeBusinessதமிழ்பள்ளிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க ஒன்றுபட்ட பிரபலங்களும் சமூகத் தலைவர்களும்

தமிழ்பள்ளிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க ஒன்றுபட்ட பிரபலங்களும் சமூகத் தலைவர்களும்

மலேசியத் தமிழ்பள்ளிகளின் பாரம்பரியத்தையும், மொழி மரபையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள “Tamil Schools – Our Roots & Our Future” (தமிழ்ப்பள்ளிகள் – நம் வேர்கள், நம் பள்ளிகள், நம் எதிர்காலம்) என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்ப்பள்ளிகளின் பெருமை, தமிழ்மொழியின் செழுமை, பண்பாட்டு மரபு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளைப் பாதுகாக்க சமூக ஒற்றுமையையும், பொது பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கும் அடையாளமாக அமைந்துள்ளது.

இந்த அர்த்தமிக்க முயற்சிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். யோகா ஆசிரியர் துரை, மலேசிய பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ், நடிகை பஷினி சிவகுமார், நடிகை யாஸ்மின், உடற்பயிற்சி பயிற்சியாளர் கேசவன் உள்ளிட்ட பலரும் இந்த இயக்கத்தில் இணைந்து, தமிழ்ப்பள்ளிகளின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் மக்களிடையே எடுத்துரைத்து வருகின்றனர்.

அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators), முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

“ஒரு தமிழ்ப்பள்ளி என்பது வெறும் கல்வி கற்கும் இடமல்ல; அது நம் மொழி, நம் கலாசாரம், நம் அடையாளம் மற்றும் நம் எதிர்காலம் உருவாகும் புனித இடம்.” என்ற செய்தியை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு குழந்தையும் தமிழ்மொழியுடன் வளர வேண்டும் என்ற கனவை நனவாக்க, பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை இந்த இயக்கம் உணர்த்துகிறது. நம் வேர்களை மறந்தால், நம் அடையாளத்தை இழந்துவிடுவோம்.

தமிழ்ப்பள்ளிகளை காப்பது என்பது கட்டிடங்களை காப்பது அல்ல; ஒரு மொழியையும், ஒரு பண்பாட்டையும், ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையும் காப்பதாகும். “நம் வேர்கள் • நம் பள்ளிகள் • நம் எதிர்காலம்” என்பது ஒரு வாசகம் மட்டுமல்ல; ஒவ்வொரு தமிழனின் இதயத்தில் ஒலிக்க வேண்டிய உறுதிமொழியாக மாற வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

RELATED ARTICLES

Most Popular