
டிக்டோக் ஷோப் உச்ச மாநாடு மலேசியா 2026 நிகழ்வில் ஆயிரக்கணக்கான சிறு தொழில்முனைவோர், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்த பிரதமர், டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் MADANI அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய வாய்ப்புகளைத் தேடும் இளம் தொழில்முனைவோர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களின் வெற்றியைப் பாராட்டிய அவர், அவர்களின் திறமைகளை வளர்க்க தேவையான பயிற்சி, திறன்கள், வாய்ப்புகள் மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றார்.

சிறு வியாபாரிகள் மற்றும் புதிய தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் முதலீட்டு பற்றாக்குறை, அனுபவக் குறைபாடு, சந்தை அணுகல் மற்றும் வெளிநாட்டு தளங்கள் மற்றும் பொருட்களுடனான போட்டி உள்ளிட்ட சவால்கள் குறித்து கேள்வி-பதில் அமர்வில் நேரடியாக கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தக் கவலைகள் அனைத்தும் ஆராயப்பட்டு, பொருத்தமான முன்மொழிவுகள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் உள்ளிட்ட வழிகளில் பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பயனர்களைப் பாதுகாப்பது, நியாயமான போட்டியை உறுதி செய்வது மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் மின்னணு வர்த்தக விதிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், மலேசிய தினத்தை முன்னிட்டு 2026 செப்டம்பர் 9ஆம் தேதி ‘Ihsan Rahmah 9.9 Sale’ ஆன்லைன் விற்பனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் மக்கள் பெற்றுக்கொள்ள முடிவதுடன், சிறு தொழில்கள் குறைந்த செலவில் தங்களது பொருட்களை சந்தைப்படுத்தி வருமானத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


