Sunday, August 23, 2026
spot_img
HomeUncategorizedஆந்திரப் பிரதேச பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அறிவாற்றல் பயிற்சி

ஆந்திரப் பிரதேச பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அறிவாற்றல் பயிற்சி

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 150 உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துவது தொடர்பான டிஜிட்டல் அறிவாற்றல் பயிற்சி வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் Zilla Parishad High School (ZPHS), Tenali, ZPHS Penumaka மற்றும் ZPHS International Model School ஆகிய மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு டிஜிட்டல் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, ஆன்லைன் மோசடிகள், சைபர் துன்புறுத்தல், போலியான தகவல்கள், தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகங்களில் உருவாகும் டிஜிட்டல் தடயங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியின் முக்கிய அம்சங்களாக Safety of Digital ExplorationThink Before You Click மற்றும் Be a Digital Influencer for Good ஆகிய மூன்று கருப்பொருள்கள் இடம்பெற்றன. வினாடி வினா, விளையாட்டுகள், கலந்துரையாடல்கள் மற்றும் டிஜிட்டல் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட செய்முறைப் பயிற்சிகள் மூலம் மாணவர்களுக்கு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

இணையத்தைப் பயன்படுத்தும்போது தாங்கள் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு சூழ்நிலைகள் குறித்து மாணவர்கள் கலந்துரையாடினர். சந்தேகத்திற்குரிய உள்ளடக்கங்களை அடையாளம் காண்பது, தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு சிந்திப்பது மற்றும் இணையத்தில் ஆபத்துகளை எதிர்கொள்ளும்போது எவ்வாறு செயல்படுவது என்பதும் பயிற்சியின் மூலம் விளக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு தலைமை தாங்கிய மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (USM) தொடர்பியல் கற்கை மையத்தின் (PPK) விரிவுரையாளர் டாக்டர் ராணி ஆன் பாலராமன், டிஜிட்டல் அறிவாற்றல் என்பது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறனுடன் மட்டும் முடிவடைவதில்லை எனத் தெரிவித்தார்.

“இளைஞர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்திருப்பதுடன், தங்களது தகவல்களைப் பகிரும்போது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மற்றும் டிஜிட்டல் தளங்களில் தகவல்களைப் பெறும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார்.

இன்றைய இளைஞர்களின் சமூக தொடர்புகளும் தகவல் தேடல்களும் பெருமளவில் டிஜிட்டல் சூழலுக்கு மாறியுள்ள நிலையில், நடைமுறை அடிப்படையிலான இதுபோன்ற பயிற்சிகள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தில் USM-ஐச் சேர்ந்த எட்டு மாணவர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக பங்கேற்றதுடன், VIT-AP University உடன் இணைந்து சமூக ஈடுபாடு மற்றும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், தங்களது சமூக ஊடகப் பயன்பாட்டு பழக்கங்களை மறுபரிசீலனை செய்வதற்கும், இணையத்தில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் உள்ளடக்கங்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு பெற்றனர்.

சிக்கலானதாக மாறிவரும் டிஜிட்டல் உலகில், இளம் தலைமுறையினருக்கு சிறு வயதிலேயே சைபர் பாதுகாப்பு மற்றும் ஊடக அறிவாற்றல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இணைய ஆபத்துகளை அடையாளம் கண்டு தொழில்நுட்பத்தை மிகவும் பொறுப்புடனும் விமர்சன ரீதியாகவும் பயன்படுத்த அவர்களுக்கு உதவும் எனக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular