
செங்காங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் RM248,560 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த புதிய ஆலயக் கட்டுமானப் பணிகள் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றன. பணிகளின் நிலவரத்தை நேரில் பார்வையிட்ட கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், ஆலயம் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது சமூகத்தின் அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியலுடன் இணைந்த முக்கிய இடம் எனக் குறிப்பிட்டார்.

“ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னேறி வருவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது சமூகத்தின் நீண்டநாள் கனவு. அந்தக் கனவு நனவாக எங்களால் முடிந்த ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறோம்,” என்றார்.

இதன் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் மூலம் RM18,000 நிதி ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிதி ஆலயத்தின் தேவைகள் மற்றும் தொடர்புடைய பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் இந்து அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான பராமரிப்பு முயற்சியான RIBI திட்டத்தின் மூலம் RM248,560 நிதி ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதிக்கான மாதிரி காசோலையை முன்னதாக ஆலய நிர்வாகத்திடம் வழங்கிய தியோ நீ சிங், அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தினார்.
“RM248,560 நிதி செங்காங் சமூகத்திற்கு நிச்சயமாக ஒரு நல்ல செய்தி. கட்டுமானச் செலவின் சுமையை குறைப்பதுடன், பணிகளை மேலும் சுமுகமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க இது உதவும். ஆலயம் முழுமையாக நிறைவடைந்து, வரும் ஆண்டுகளில் சமூக மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு,” என்றார்.
இதனிடையே, அவரது வருகையின்போது செங்காங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்களின் பிரதிநிதிகளுக்கு உணவுப் பொருள் கூடைகளும் வழங்கப்பட்டன.
ஒரு புதிய ஆலயம் உருவாகிறது… அதனுடன் ஒரு சமூகத்தின் நீண்டநாள் கனவும் நனவாகிறது.


