Wednesday, October 7, 2026
spot_img
HomeBusiness38 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த அனைத்துலக அங்கீகாரம் – எஸ்.பி. சரவணனுக்கு ஐகோனிக் 2026 விருது

38 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த அனைத்துலக அங்கீகாரம் – எஸ்.பி. சரவணனுக்கு ஐகோனிக் 2026 விருது

மலேசிய தையல் துறைக்கு பெருமை சேர்த்து சாதனை

38 ஆண்டுகளாக தையல் துறையில் தொடர்ந்து பயணித்து வரும் எஸ்.பி. சரவணன், தமிழ்நாடு ஈரோட்டில் நடைபெற்ற உலக தையல் தொழிலாளர் மாநாட்டில் “Best Iconic Award 2026” விருதை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தொழில்முனைவில் சிறந்த சாதனை, தனித்துவமான பங்களிப்பு மற்றும் தையல் துறைக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

SP சாரா கேக் & டைலரிங் நிறுவனத்தின் நிறுவுநரான சரவணன், தொழில்முனைவோராக மட்டுமின்றி தையல் பயிற்சியாளராகவும் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது 38 ஆண்டுகால அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் அடுத்த தலைமுறையினருக்கு பகிர்ந்து வருவதுடன், தையல் துறையில் புதிய திறமைகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த விருதை மேலும் சிறப்பாக்கிய மற்றொரு அம்சம், ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் சுமார் 2,500 தையல் கலைஞர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், மலேசியாவிலிருந்து இந்த அங்கீகாரத்தை பெற்ற ஒரே நபராக எஸ்.பி. சரவணன் இடம்பெற்றிருப்பதாகும்.

மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு சென்று பெற்ற இந்த அங்கீகாரம், அவரது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல. மலேசிய தையல் துறைக்கும் கிடைத்த ஒரு பெருமை என்றே சொல்லலாம்.

“38 ஆண்டுகால தையல் பயணத்தில் கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. என்னிடம் கற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் முன்னேற்றமே எனது மிகப்பெரிய வெற்றி,” என சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தையல் பயணத்தில் கிடைத்த முதல் முக்கியமான அங்கீகாரம் இதுவே என்றும், இந்த விருதை தனது தையல் குருமார்கள் அனைவருக்கும் சமர்ப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமுறை தையல் கலைஞர்களை உருவாக்கும் பணியை இன்னும் வேகமாக முன்னெடுத்து, தனது அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே தனது அடுத்த இலக்கு என்றும் சரவணன் தெரிவித்துள்ளார்.

38 ஆண்டுகள் உழைப்பு… ஆயிரக்கணக்கான மாணவர்கள்… ஒரு அனைத்துலக அங்கீகாரம்.

இது ஒரு விருது மட்டுமல்ல…
ஒரு நீண்ட பயணத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

RELATED ARTICLES

Most Popular