
கெடிலான் 2026 தேசிய மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பிரதமரும் கட்சித் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரையாற்றி, கட்சியின் புதிய திசை, உறுதி மற்றும் சீர்திருத்த போராட்டத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
“கெடிலான் எளிதான பாதையை அல்ல, கொள்கை, இலட்சியம் மற்றும் சரியானதைச் செய்யும் துணிச்சலின் பாதையையே தேர்வு செய்கிறது. அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் கொள்கைகளையோ, சீர்திருத்தத்தின் இலட்சியங்களையோ ஒருபோதும் விற்க மாட்டோம்,” என அவர் தெரிவித்தார்.

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளை அனைவரும் பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் குறைகளைச் சீர்திருத்தி ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்ட நடவடிக்கைகளுடன் முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன, மத, பிராந்திய வேறுபாடுகளைத் தாண்டி அனைவருக்கும் போராடும் இயக்கமாக கெடிலான் தொடர வேண்டும் எனக் கூறிய அன்வார், “நீதியைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, கொள்கைகள் மற்றும் செயல்களின் மூலம் அதை நிரூபிக்க வேண்டும்” என்றார்.

மடானி அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படும் என்றும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில மக்களும் சமமாக பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், ஆட்சித் திறனை வலுப்படுத்தவும், நிறுவனங்களைச் சீரமைக்கவும், குறைபாடுகளைத் திருத்தவும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்தார். முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க தபூங் ஹாஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும், மாணவர்களின் குரலை ஒடுக்கக்கூடிய புதிய சட்டமின்றி AUKU சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“அதிகாரம் என்பது தனிநபர், குடும்பம் அல்லது நெருங்கியவர்களை வளப்படுத்தும் கருவி அல்ல; அது மக்களைப் பாதுகாக்கவும், நீதியை நிலைநிறுத்தவும், மனித கண்ணியத்தை உயர்த்தவும் வழங்கப்பட்ட பொறுப்பு,” என அன்வார் இப்ராஹிம் தனது உரையில் குறிப்பிட்டார்.
உரையின் முடிவில், “அணிவகுப்பை ஒழுங்குபடுத்தி, இயக்கத்தை வலுப்படுத்தி, மக்கள் மற்றும் நாட்டிற்காக தொடர்ந்து முன்னேறுவோம்,” எனக் கட்சித் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.


