Friday, June 12, 2026
HomeLifestyleதோல்விகளை படிக்கட்டாக மாற்றிய பெண் – உலக மேடையில் ஜொலித்த டாக்டர் ரேஷ்மா பிரகாஷ்

தோல்விகளை படிக்கட்டாக மாற்றிய பெண் – உலக மேடையில் ஜொலித்த டாக்டர் ரேஷ்மா பிரகாஷ்

உலகின் மிகவும் பிரபலமான திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்துசென்ற மலேசிய உளவியல் நிபுணரும் மருத்துவத் தொழில்முனைவோருமான டாக்டர் ரேஷ்மா பிரகாஷ், நாட்டின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் சென்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான Mrs Universe போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரேஷ்மா, இந்த வாய்ப்பை தனது தனிப்பட்ட வெற்றியாக மட்டும் அல்லாமல், மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையான தருணமாகவும் கருதுகிறார்.

“கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் நடந்தது என் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம். மலேசியப் பெண்ணாக உலக மேடையில் நிற்பது மிகுந்த பெருமையாக இருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலத்தின் சிகாமட்டில் பிறந்த ரேஷ்மாவின் வாழ்க்கைப் பயணம் எளிதானதல்ல. அவர் பிறந்து ஒன்பது மாதங்களிலேயே தந்தையை இழந்தார். தாயார் ஒருவரே அவரையும் அவரது அக்காவையும் வளர்த்தார்.

டயாலிசிஸ் தாதியராக பணியாற்றிய தாயின் கடின உழைப்பை பார்த்து வளர்ந்த ரேஷ்மா, பொருளாதார சவால்களையும் சிறுவயதில் சந்தித்த அவமதிப்புகளையும் தாண்டி வெற்றிப் பாதையில் பயணித்தார்.

உளவியல் துறையில் பட்டம் பெற்ற அவர், இன்று உளவியல் நிபுணராகவும் மருத்துவத் தொழில்முனைவோராகவும் பல சுகாதார மையங்களை நிர்வகித்து வருகிறார். அதே நேரத்தில் மனைவியாகவும், மூன்று குழந்தைகளின் தாயாகவும் தனது பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

கேன்ஸ் விழாவில் அவர் அணிந்திருந்த சிறப்பு ஆடை, பெண்களின் தன்னம்பிக்கை, அழகு மற்றும் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

“எனது வெற்றிக்குப் பின்னால் என் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு மிகப்பெரியது. இந்த சாதனை எனக்கே அல்ல, என்னை நம்பிய அனைவருக்குமான பெருமை,” என்று ரேஷ்மா கூறினார்.

பெண்கள் தங்கள் கனவுகளை அச்சமின்றி போராட வேண்டும் என்ற செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்ல விரும்பும் ரேஷ்மா, தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தொடர்ந்து சேவை செய்யவும் உறுதியளித்துள்ளார்.

டாக்டர் ரேஷ்மா பிரகாஷின் இந்த சாதனை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இருந்தால் மலேசிய பெண்களும் உலக மேடையில் ஜொலிக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular