Thursday, October 8, 2026
spot_img
HomeBusinessபுகைமூட்டம் : செனாய் விமான நிலையத்தில் 5 விமானங்கள் பாதிப்பு

புகைமூட்டம் : செனாய் விமான நிலையத்தில் 5 விமானங்கள் பாதிப்பு

புகைமூட்டம்(Jerebu) காரணமாக பார்வைத்திறன் குறைந்ததால், இன்று காலை குலாய் செனாய் சர்வதேச விமான நிலையத்தில் (LTAS) தரையிறங்கவும் புறப்படவும் இருந்த ஐந்து விமானங்கள் பாதிக்கப்பட்டன.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் கூறுகையில், குறைந்த பார்வைத்திறன் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக சில விமானங்கள் செனாய் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட விமானங்கள் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உள்ளிட்ட மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக அவர் கூறினார்.

“இன்று காலை செனாய் விமான நிலையத்தில் பார்வைத்திறன் குறைவாக இருந்ததால் சில விமானங்கள் பாதிக்கப்பட்டன. தரையிறங்க முடியாத விமானங்கள் மட்டுமின்றி, இன்னும் புறப்படாத விமானங்களும் தாமதப்படுத்தப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் நடைபெற்ற மின்சாரத்தால் இயக்கப்படும் புதிய லாரி படையணியின் தொடக்க விழாவுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரின் சொந்த விமானமும் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாகி, காலை 9 மணியளவில் புறப்பட்டதாக அவர் கூறினார்.

“விமானம் புறப்பட்டாலும் செனாயில் தரையிறங்க முடியாது என்பதால், KLIA-யிலேயே காத்திருப்பது சிறந்தது என முடிவு செய்தோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் காத்திருந்த பின்னர் காலை 9 மணிக்கு புறப்பட்டோம்,” என்றார்.

இதனிடையே, இன்று காலை 9 மணி நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தின் ஏழு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

அதில் செகாமாட் பகுதியில் 186 என்ற அதிகபட்ச IPU பதிவாகியுள்ள நிலையில், பாசிர் கூடாங் – 180, லார்கின் – 178, தங்காக் – 171 என்ற அளவிலும் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular