Friday, October 9, 2026
spot_img
HomeBusinessஉணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் உணவுச் சட்டத் திருத்த மசோதா 2026 – மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க...

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் உணவுச் சட்டத் திருத்த மசோதா 2026 – மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கொண்டுவரப்பட்ட உணவுச் சட்டத் திருத்த மசோதா 2026, 15ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது தவணையின் மூன்றாவது கூட்டத்தொடரில் மக்களவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கெஃப்லி அஹ்மாட் இம்மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

உணவின் மூலம் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகள் மற்றும் உணவு தயாரித்தல், விற்பனை செய்தல், நுகர்தல் ஆகியவற்றில் இடம்பெறக்கூடிய மோசடிகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் (சட்டம் 281) முக்கிய நோக்கமாகும்.

இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு 43 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய உணவுப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டு, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்குச் சட்டத்தில் உள்ள சில அம்சங்கள் போதுமானதாக இல்லை எனக் கருதப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும், சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருள்கள் பாதுகாப்பானவையாக இருப்பதை உறுதிசெய்யவும் இத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

மசோதாவின் முக்கிய திருத்தங்கள்

1. உணவுடன் தொடர்பு கொள்ளும் பொருள்களுக்கான கட்டுப்பாடுகள்

உணவைக் கையாளப் பயன்படுத்தப்படும் கையுறைகள் மற்றும் உணவுப் பொதியிடும் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட, உணவுடன் தொடர்பு கொள்ளும் பொருள்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்.

2. சுகாதாரத் தலைமை இயக்குநரின் அதிகாரங்களை வலுப்படுத்துதல்

மக்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருள்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் தலைமை இயக்குநரின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்படும்.

  • உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களைக் கொண்ட உணவுகளை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்ட உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களை மூடுவதற்கான அதிகாரம் வலுப்படுத்தப்படும்.
  • நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்காமல், பொதுமக்களுக்கு எச்சரிக்கைத் தகவல்களை வெளியிடுவதற்கான அதிகாரமும் வலுப்படுத்தப்படும்.

3. அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

4. அபராதத் தொகைகள் மறுஆய்வு செய்யப்படும்

சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதங்களின் அளவுகள் மறுபரிசீலனை செய்யப்படும்.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதில் இந்தத் திருத்தங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இம்மசோதா, இதே நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மேலவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular