
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்களைச் சமூக ஊடக உள்ளடக்கங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பிற மதங்களின் சடங்குகள் மற்றும் கலாசார நடைமுறைகள் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் காணொளிகள் உருவாக்குவதைத் தவிர்த்து, சமூக ஊடகப் பிரபலங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் நேர்மறையான செய்திகளைப் பரப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்துமலை தைப்பூசத் திருவிழா தொடர்பான காணொளி சர்ச்சை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணை முடியும் வரை யாரையும் குற்றவாளியாகக் கருதவோ, விவகாரத்தை அரசியலாக்கவோ கூடாது என்றார்.
மேலும், பிற சமூகங்களின் விழாக்களில் பங்கேற்கும்போது அவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுக்கு உரிய மரியாதை அளிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


