Monday, November 23, 2026
spot_img
HomeBusinessசாலையின் நடுவே பட்டாசு வெடித்த சம்பவம்: நால்வர் கைது!

சாலையின் நடுவே பட்டாசு வெடித்த சம்பவம்: நால்வர் கைது!

ஜோகூர் மாநிலம், ஸ்கூடாய் தாமான் நேசா பகுதியில் சாலையின் நடுவே பட்டாசுகளை வெடித்த சம்பவம் தொடர்பாக நான்கு ஆண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து விளக்குக்கு அருகிலுள்ள சாலையில் ஒரு கும்பல் பட்டாசுகளை வெடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஸ்கூடாய் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் 16 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என வடக்கு ஜோகூர் பாரு மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான காணொளி அதே நாளில் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து விசாரணையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், கைது செய்யப்பட்ட நால்வருக்கும் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றப் பதிவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையிலும் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular