Monday, November 23, 2026
spot_img
HomeBusinessஊழல் குற்றவாளிகளுக்காக நாட்டின் நற்பெயரைப் பலிகொடுக்க முடியாது – ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன்

ஊழல் குற்றவாளிகளுக்காக நாட்டின் நற்பெயரைப் பலிகொடுக்க முடியாது – ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன்

உயர் பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படும்போது, அதன் பாதிப்பு நீதிமன்றத்துடன் முடிவடைவதில்லை. மாறாக, அது ஒட்டுமொத்த நாட்டின் நற்பெயர், சர்வதேச நம்பிக்கை மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊழல் என்பது திருடப்பட்ட பணத்தின் அளவை மட்டும் சார்ந்தது அல்ல. அது நாட்டின் நிர்வாக நேர்மை, ஜனநாயகத்தின் அடித்தளம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையது என அவர் சுட்டிக்காட்டினார்.

உயர் பதவியில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபட்டு குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகப் பங்காளிகள் மலேசியாவின் நிர்வாகத் திறன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என்றார்.

அதேவேளையில், பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்க அமைப்புகள், அமலாக்கத் துறைகள் மற்றும் நீதித்துறையின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் செல்வாக்கு அல்லது அதிகாரம் காரணமாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதும், அவர்களின் செயல்களை நியாயப்படுத்துவதும் ஆபத்தான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என எச்சரித்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

செல்வம், அரசியல் செல்வாக்கு, பதவி அல்லது தொடர்புகள் எதுவாக இருந்தாலும், எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறை நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளும், ஒருதலைப்பட்சமான அரசியல் ஆதரவுகளும் ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

ஊழலின் பாதிப்பை இறுதியில் சாதாரண மக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அதன் விளைவுகள் எதிர்காலத் தலைமுறையினரையும் பாதிக்கும் என்றார்.

மேலும், ஊழல் விவகாரங்களால் பாதிக்கப்பட்ட நாட்டின் நிர்வாக நம்பகத்தன்மையையும் சர்வதேச நற்பெயரையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக எதிர்கால அரசாங்கங்கள் பல ஆண்டுகளைச் செலவிட வேண்டிய சூழலும் உருவாகலாம் எனக் குறிப்பிட்டார்.

தனிநபரை விட நாடே முக்கியம்

“எந்தவொரு தனிநபரையும் விட நாடு பெரியது. எந்தவொரு அரசியல் தலைவரின் பாரம்பரியத்தையும் விட நாட்டின் நிறுவனங்களின் நேர்மையே முக்கியமானது.

அரசியல் விசுவாசம் ஒருபோதும் ஊழலை நியாயப்படுத்தும் காரணமாக இருக்கக்கூடாது. சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிப்பது என்பது பொறுப்புக்கூறலைக் கைவிடுவதாகாது,” என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

மலேசியாவுக்கு தனிப்பட்ட நலன்களைவிட பொதுநலனை முன்னிலைப்படுத்தும் தலைமைத்துவமும், அரசியல் பாதுகாப்பைவிட பொறுப்புக்கூறலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிர்வாகமும் தேவை என அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, எந்தவொரு தனிநபரையும் பாதுகாப்பதற்காக மலேசியாவின் நற்பெயரைப் பலிகொடுக்கக் கூடாது என்றும், நாட்டின் கௌரவம் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது என்றும் தெரிவித்தார்.

“குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுக் காவல் வழங்கப்பட வேண்டுமா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular