Monday, November 23, 2026
spot_img
HomeBusiness50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தீபாவளி உதவி: லிங்கன் பல்கலைக்கழகக் கல்லூரி முன்னெடுப்பு!

50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தீபாவளி உதவி: லிங்கன் பல்கலைக்கழகக் கல்லூரி முன்னெடுப்பு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தை லிங்கன் பல்கலைக்கழகக் கல்லூரி (Lincoln University College) முதன்முறையாக முன்னெடுத்துள்ளது.

“ஒளித் திருநாளில் நம்பிக்கையின் கொண்டாட்டம்” (A Festival of Lights, A Celebration of Hopes) என்ற கருப்பொருளில் இரண்டு கட்டங்களாக இந்த உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக, கடந்த நவம்பர் 6ஆம் தேதி தனித்து வாழும் தாய்மார்களுக்கான சங்கத்துடன் இணைந்து, 10 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு கூடையிலும் அரிசி, மாவு, மாகி உடனடி நூடுல்ஸ், அமுக்கப்பட்ட பால் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அன்றாடத் தேவைக்கான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த உதவியைப் பெற்றவர்களில், உடல் இயக்கக் குறைபாடு கொண்ட தனித்தாய் தாமையெண்டி ராஜூவும் ஒருவர். தனது அன்றாட குடும்பச் செலவுகளை மகளின் வருமானத்தை நம்பியே அவர் சமாளித்து வருகிறார்.

உதவி குறித்து அவர் கூறுகையில், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அத்தியாவசியப் பொருட்கள் குடும்பத்தின் அன்றாடச் சுமையைக் குறைக்க உதவுவதாகவும், தங்களைப் போன்ற குடும்பங்கள் மீது அக்கறை காட்டுவோர் இருப்பது மனதிற்கு ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு பயனாளியான உமாதேவி பாலகிருஷ்ணனும், சிறிய உதவியாக இருந்தாலும் குடும்பங்களுக்கு அது பெரும் அர்த்தத்தைக் கொடுப்பதாகக் கூறி தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நவம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியுடன் இணைந்து, அத்தொகுதியில் உள்ள மூன்று பகுதிகளில் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகள் விநியோகிக்கப்பட உள்ளன.

லிங்கன் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் டாக்டர் அமியா பூமிக் கூறுகையில், தீபாவளியின் உண்மையான சிறப்பு கொண்டாட்டங்களில் மட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதில்தான் உள்ளது என்றார்.

மேலும், கல்வி என்பது வகுப்பறையுடன் முடிந்துவிடாமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDG) ஏற்ப இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வறுமை ஒழிப்பு, பசியில்லா உலகம், பாலின சமத்துவம் மற்றும் சமூகப் பங்காளித்துவம் ஆகிய இலக்குகளுக்கும் இந்த முயற்சி பங்களிக்கிறது.

“Learn. Transform. Belong.” என்ற தத்துவத்தின் அடிப்படையில், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே சமூக அக்கறை, மனிதநேயம் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

RELATED ARTICLES

Most Popular