Monday, November 23, 2026
spot_img
HomeBusinessநஜிப் வீட்டுக்காவலில் கடும் கட்டுப்பாடுகள் – தொலைபேசி பயன்படுத்தத் தடை!

நஜிப் வீட்டுக்காவலில் கடும் கட்டுப்பாடுகள் – தொலைபேசி பயன்படுத்தத் தடை!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வீட்டுக்காவலில் தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தைக் கழிக்கும் போது, தொலைபேசி மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார். கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நஜிப் மீது பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி, தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான தடை மட்டுமின்றி, அவரது நடமாட்டம், சந்திப்புகள் மற்றும் வெளித் தொடர்புகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத் திட்டங்களிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

குறிப்பிட்ட முகவரியில் மட்டுமே அவர் தங்கியிருக்க வேண்டும். எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வேறு வீடு அல்லது கட்டடத்திற்குச் செல்லவோ, ஒதுக்கப்பட்ட முகவரியை விட்டு வெளியேறவோ அனுமதி இல்லை.

குறிப்பாக, மனைவி, பிள்ளைகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தங்குவதற்கும் முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். அதேவேளை, வெள்ளிக்கிழமை தொழுகை உள்ளிட்ட மத வழிபாடுகளுக்காக அவர் பள்ளிவாசல் அல்லது சுராவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விருந்தினரையும் சந்திக்க முடியாது. மன்னிப்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அவருடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து நவம்பர் 12ஆம் தேதி மக்களவையில் புலாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் கையாட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் இவ்விவரங்களை வெளியிட்டார்.

நஜிப் தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வீட்டுக்காவல் தொடர்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்காக கூடுதல் நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் சிறைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வீட்டுக்கு மாற்றப்படுவதற்கு முன்னரே அனைத்து விதிமுறைகளும் நஜிப்புக்கு விளக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

RELATED ARTICLES

Most Popular