
கோலாலம்பூர் கெப்போங்கில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி மீது வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் தனது முகநூல் பதிவின் மூலம் பிரார்த்தனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் அமலாக்க அதிகாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு குற்றச் செயல்களும் வன்முறைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பின்னணி அல்லது அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும், பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்க அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அன்வார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


