
பொருள் மற்றும் சேவை வரியான GST-ஐ மீண்டும் அறிமுகப்படுத்தாத அரசாங்கத்தின் முடிவு அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்டதல்ல என்றும், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதே முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சருமான அன்வார், மக்களின் வருமானம் இன்னும் குறைவாக இருக்கும் தற்போதைய சூழலில் GST வரியை மீண்டும் அமல்படுத்துவது பொருத்தமான முடிவாக இருக்காது என்றார்.
GST என்பது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கக்கூடிய பரவலான வரி முறையாக இருப்பதால், அது மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.
எனினும், தற்போது நடைமுறையில் உள்ள விற்பனை மற்றும் சேவை வரி (SST) முறையில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, தொழில்துறையினர் முன்வைத்துள்ள இரட்டை வரிவிதிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் SST முறையில் சில திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும், அதற்காக GST முறைக்கு மாற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பொருளாதாரக் கொள்கைகளில் நான் பிடிவாதமாக இருப்பதில்லை. SST முறையைத் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டே, அதனை மேம்படுத்துவதற்குத் தேவையான சில மாற்றங்களைச் செய்வதில் தவறில்லை.
“GST வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இது அரசியல் சார்ந்த முடிவு அல்ல. நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்குமென்றால் இதில் என்ன அரசியல் இருக்கிறது? GST அனைவருக்கும் விதிக்கப்படும் வரி. ஆனால் SST மூலம் வணிகர்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. எனவே, வணிகர்களுக்கு வரி விதிக்கும் முறையையே நான் தேர்வு செய்கிறேன்” என அன்வார் தெரிவித்தார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற பிரதமருக்கான கேள்வி நேரத்தின் (MQT) போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் இதனைத் தெரிவித்தார்.


