Monday, November 23, 2026
spot_img
HomeBusinessபேராக் விபத்தில் சிக்கிய இரு செய்தியாளர்களுக்கு PERKESO நிதியுதவி விரைந்து வழங்க உத்தரவு – ரமணன்

பேராக் விபத்தில் சிக்கிய இரு செய்தியாளர்களுக்கு PERKESO நிதியுதவி விரைந்து வழங்க உத்தரவு – ரமணன்

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பேராக் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய இரு ஊடகவியலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பான PERKESO வழங்க வேண்டிய நிதியுதவிகளை விரைவாக வழங்குமாறு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு ஊடகவியலாளர்களின் PERKESO பங்களிப்பு விவரங்களைப் பெற்று, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தனது பத்திரிகைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“சமூகப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நாம் ஒருபோதும் அலட்சியமாகக் கருதக்கூடாது. உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நிதியுதவியும் நேரடியாகச் சென்றடைய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இன்று இரவு நடைபெற்ற PERKESO iLINDUNGu 2026 ஊடக விருது விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நிகழ்ந்த அந்த விபத்தில் New Straits Times (NST) மற்றும் BERNAMA செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த தலா ஒரு ஊடகவியலாளர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மறைந்த தமிழ் ஊடகவியலாளர் தேவராஜனுக்கு இரங்கல்

இதற்கிடையில், மக்கள் ஓசை நாளிதழின் முன்னாள் மூத்த ஆசிரியர் ஏ. தேவராஜனின் மறைவுக்கும் ரமணன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

தமிழ் ஊடகத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அவரது மறைவு, மலேசிய ஊடகத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

தனது நெருங்கிய நண்பரான மறைந்த தேவராஜன், பத்திரிகைத்துறையில் 50 ஆண்டுகள் சேவையாற்றியதுடன், அதில் 15 ஆண்டுகள் மக்கள் ஓசை நாளிதழில் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் ஊடகத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பும் அனுபவமும் என்றும் நினைவுகூரப்படும் என ரமணன் கூறினார்.

ஊடகவியலாளர்களின் பணிக்கு பாராட்டு

மேலும், பொதுமக்களுக்கு துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களின் முக்கியப் பொறுப்பையும் ரமணன் பாராட்டினார்.

வெயில், மழை எனப் பாராமல் களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரித்து, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தியாளர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றார்.

“ஊடகப் பணி என்பது எளிதானதல்ல. அலுவலகத்தில் அமர்ந்து செய்யும் வேலை மட்டுமல்ல. அரசியல்வாதிகள் வந்து உரையாற்றிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால், செய்தியாளர்கள் தகவல்களைச் சரிபார்த்து, உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

நான் ஒரு மண்டபத்தில் பேசினால் 500 பேர் மட்டுமே தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஊடகவியலாளர்கள் மூலமாக அந்தத் தகவல் பல லட்சம் மக்களைச் சென்றடைகிறது. உங்கள் அனைவரின் சிறப்பான பணிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

Most Popular