Friday, June 5, 2026
Homeடிவெட் 2026 கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் திரளாக வருகை தர வேண்டும் – டத்தோ ஸ்ரீ அஹ்மத்...

டிவெட் 2026 கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் திரளாக வருகை தர வேண்டும் – டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி

TVET Negara 2026 கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றியடையச் செய்ய வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அழைப்பு விடுத்துள்ளார்.

புத்ராஜெயா டத்தாரானில் இன்று தொடங்கியுள்ள இந்த தேசிய அளவிலான கொண்டாட்டம் ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.தேசிய டிவெட் மன்றத்தின் (MTVET) தலைவருமான அஹ்மத் ஜாஹித், இந்த விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் பொதுமக்களை கவர காத்திருப்பதாக தெரிவித்தார்.

தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பதிவில் அவர் கூறுகையில், “மலேசியர்கள் அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வந்து இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். காலை 9 மணி முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் புதுமைக் கண்காட்சிகள், வேலைவாய்ப்பு, திறனாய்வு போட்டிகள், தொழில்துறை கருத்தரங்குகள், தொழில்நுட்ப காட்சிப்படுத்தல்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மேலும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் திறமைகள், தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் டிவெட் கல்வியின் பங்களிப்பை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வு சுமார் 5 இலட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதிலும், நாட்டின் பொருளாதார போட்டித்திறனை மேம்படுத்துவதிலும் டிவெட் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும்.

TVET Pilihan Utama Kerjaya” (வேலைவாய்ப்புக்கான முதன்மைத் தேர்வு TVET) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு கொண்டாட்டத்தில், 107-க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

விண்வெளி, மின்னணு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம், விவசாயம், போக்குவரத்து மற்றும் வாகனத் தொழில், மேம்பட்ட உற்பத்தி, சேவைத் துறை, ரயில், கடல்சார் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட ஒன்பது முக்கிய துறைகள் இந்நிகழ்வில் பிரதிநிதித்துவம் பெறுகின்றன.

இதன் நிகழ்வை பிரதமர் Anwar Ibrahim நாளை காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.

RELATED ARTICLES

Most Popular