Friday, June 5, 2026
Homeகாமாத்தான் மற்றும் காவாய் கொண்டாட்டம் : மலேசியாவின் பன்முக கலாச்சார பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் மலேசியா...

காமாத்தான் மற்றும் காவாய் கொண்டாட்டம் : மலேசியாவின் பன்முக கலாச்சார பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் மலேசியா சுற்றுலாதுறை

விசிட் மலேசியா 2026 (VM2026) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மலேசியா சுற்றுலாதுறை காமாத்தான் மற்றும் காவாய் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது.

இந்த வரவேற்பு நிகழ்வுகள் 2026 மே 30 ஆம் தேதி கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்திலும், மே 31 ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ. 1-லும் , ஜூன் 1 ஆம் தேதி கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்திலும் நடைபெற்றன. மலேசியாவின் முக்கிய அனைத்துலக நுழைவாயில்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கே.எல்.ஐ.ஏ. 1-ல் நடைபெற்ற நிகழ்வில் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஷஹாருடின் அபு சோஹோட், டூரிசம் மலேசியாவின் செயல் துணை இயக்குநர் விஸானி ரோஸ்மின், மலேசிய தங்கும் விடுதி சங்கத்தின் தலைவர் டத்தின் கிறிஸ்டினா தோ மற்றும் அமைச்சு, டூரிசம் மலேசியா, மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) ஆகியவற்றின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

VM2026 கலாச்சார ஈடுபாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் வளமான பாரம்பரியத்தையும் கலாச்சார மரபுகளையும் வெளிப்படுத்தின. காமாத்தான் மற்றும் காவாய் பெருநாள் முறையே சபாவின் கடசான்-துசுன் சமூகத்தினரும் சரவாக்கின் டயாக் சமூகத்தினரும் ஆண்டுதோறும் கொண்டாடும் முக்கிய அறுவடைத் திருவிழாக்களாகும். இவ்விழாக்கள் நன்றியுணர்வு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

விமான நிலையங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், வண்ணமயமான அலங்காரங்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். மேலும், மலேசியாவின் பாரம்பரிய இனிப்பான ‘டோடோல்’ வழங்கப்பட்டதுடன், சிறப்பு நினைவுப் பரிசுகளும் அளிக்கப்பட்டன. இதன் மூலம் மலேசியாவின் பல்வேறு உணவு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைத்தது.

இதனுடன் இணைந்து, சபாவில் மே 30 ஆம் தேதியும், சரவாக்கில் ஜூன் 2 ஆம் தேதியும் காமாத்தான் மற்றும் காவாய் விழாக்கள் நடைபெறுகின்றன. மேலும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்கும் எட்டு நாள் ‘மெகா ஃபாம்’ (Mega Fam) சுற்றுப்பயணமும் மே 29 முதல் ஜூன் 5 வரை நடைபெறுகிறது. இந்த முயற்சி மலேசியாவின் கலாச்சார வளத்தையும் சுற்றுலா சிறப்புகளையும் உலக அரங்கில் மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

2026 மார்ச் மாத நிலவரப்படி, மலேசியா மொத்தம் 1 கோடியே 6 லட்சம் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவான 1 கோடியே 1 இலட்சம் வருகைகளுடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீத உயர்வாகும். இந்த வளர்ச்சி, VM2026 பிரச்சாரத்தின் கீழ் மலேசிய சுற்றுலாத்துறையின் வலுவான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

காமாத்தான் மற்றும் காவாய் போன்ற அர்த்தமுள்ள கலாச்சார கொண்டாட்டங்கள் மூலம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உண்மையான அனுபவங்கள் ஒன்றிணையும் சிறந்த சுற்றுலா தலமாக மலேசியாவை உலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியை டூரிசம் மலேசியா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, மீண்டும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, நிலையான சுற்றுலா மேம்பாட்டையும் மலேசியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தையும் வலுப்படுத்துகின்றன.

RELATED ARTICLES

Most Popular