Monday, November 23, 2026
spot_img
HomeBusinessஅமைச்சரவை மறுசீரமைப்பு? அன்வார் திட்டவட்டமான பதில

அமைச்சரவை மறுசீரமைப்பு? அன்வார் திட்டவட்டமான பதில

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தற்போது எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருப்பதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சர்வதேச கட்டுமான வாரத்தின் (International Construction Week) தொடக்க விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியாகும் ஊகங்களுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

“இது குறித்து பேசுவதற்கு இன்னும் மிகவும் சீக்கிரம். அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது,” என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அரசாங்கத்தில் இரண்டு முக்கியப் பதவிகள் காலியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அந்தோனி லோக்கின் ராஜினாமா விவகாரம்

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி பிரதமரிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட அரச மன்னிப்பு தொடர்பாகக் கட்சி எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், நஜிப் தனது இல்லத்தில் வீட்டுக்காவல் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிய பின்னரே பதவி விலகுவேன் என அந்தோனி லோக் முன்னதாகத் தெரிவித்திருந்தார். எனவே, அவரது ராஜினாமா இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

அமிர் ஹம்சாவின் செனட்டர் பதவிக்காலம்

மற்றொரு புறம், இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அஸிசானின் செனட்டர் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், அமிர் ஹம்சா தனது பதவிக்காலம் தொடர்பாகத் தம்மிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றார்.

“அப்படியா, அவரது பதவிக்காலம் முடிவடைகிறதா? அமிர் ஹம்சா இது குறித்து என்னிடம் எதுவும் கூறவில்லை,” என அவர் குறிப்பிட்டார்.

அமிர் ஹம்சா அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், அவரது செனட்டர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த அரசியல் வட்டார எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பிரதமரின் தற்போதைய கருத்து அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

RELATED ARTICLES

Most Popular