Monday, November 23, 2026
spot_img
HomeBusinessபோக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் திடீர் விலகல்!

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் திடீர் விலகல்!

ஜசெக (DAP) பொதுச் செயலாளர் அந்தோனி லோக், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சியுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அந்தோனி லோக் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் போக்குவரத்து அமைச்சைப் பொறுப்பேற்று வழிநடத்தும் வாய்ப்பை வழங்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், தமது அமைச்சுப் பணிக்காலத்தில் அமைச்சின் மூத்த நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமக்குப் பின்னர் பதவியேற்கும் அமைச்சரிடம் பொறுப்புகளைச் சுமூகமாக ஒப்படைக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அமைச்சின் நிர்வாகப் பணிகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து மக்களுக்காகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே தனது நோக்கம் என்றும் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விவகாரம் மலேசிய அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தோனி லோக்கின் பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Most Popular