
49ஆவது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இன்று முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
மியான்மரில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதற்றம் ஆகியவை இம்மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை இரவு மணிலா வந்தடைந்த பிரதமர் அன்வார், இன்று பிலிப்பைன்ஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார். ஆசியான் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர் தொடக்க நிகழ்வுக்குத் தலைமை தாங்குவார்.
இதனைத் தொடர்ந்து ஆசியான் தலைவர்களின் முழுமையான அமர்வு மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புக் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி ஆகியோரும் சென்றுள்ளனர்.
மேலும், ஆசியான் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டமைப்பு (AIPA), ஆசியான் வர்த்தக ஆலோசனைக் குழு (Asean-BAC) மற்றும் ஆசியான் இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோருடனான தனித்தனி சந்திப்புகளிலும் அன்வார் பங்கேற்கவுள்ளார்.
இன்று மாலை ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ காண்டாவும் பிரதமரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார்.
இந்த உச்சி மாநாடு, ஆசியான் சமூகக் கட்டமைப்பு மற்றும் அமைப்பின் எதிர்காலப் பாதை குறித்து உறுப்பு நாடுகள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முக்கிய வாய்ப்பாக அமையும் என மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாறிவரும் உலகச் சூழலில் பிராந்தியத்தின் மீள்திறனை வலுப்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகளை உறுதிப்படுத்துதல் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படும்.
மியான்மர் விவகாரத்தில் ஆசியான் முன்வைத்துள்ள ஐந்து அம்ச ஒருமித்த கருத்து (Five-Point Consensus – 5PC) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலைமை குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தலைவர்கள் ஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஆசியான் கடல்சார் மையம் (Asean Maritime Centre) அமைப்பது மற்றும் தென் சீனக் கடல் தொடர்பான நடத்தை விதிமுறை (Code of Conduct – COC) பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இதுதவிர, எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுபாடு மற்றும் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவும் நெருக்கடி குறித்தும் ஆசியான் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.


