
16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசியக் கூட்டணியுடன் (PN) புதிய அரசியல் ஒத்துழைப்பு அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள தேசிய முன்னணி (BN) தற்போது எந்தத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இருப்பினும், அண்மையில் நடைபெற்ற 16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்பு வெற்றியைத் தேடித்தந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் உரிய நேரமும் சூழ்நிலையும் அமையும்போது தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

குறிப்பாக நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களைப் பொறுத்தவரை, இரு தரப்புக்கும் இடையில் தற்போது அரசியல் புரிந்துணர்வு அல்லது உடன்பாடு நிலவி வருவதாகவும் அவர் விளக்கினார்.

“தற்போதைக்கு இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. இருப்பினும், சரியான நேரம் வந்து, சூழ்நிலை அதற்கான தேவையை ஏற்படுத்தினால், இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்,” என்றார்.
இன்று பிரிக்பீல்ட்ஸில் பிபிபி கட்சி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.


