Monday, November 23, 2026
spot_img
HomeBusinessகோலாலம்பூர்: மாணவர் உயிரிழந்த இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன – கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்: மாணவர் உயிரிழந்த இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன – கல்வி அமைச்சர்

பேராக், கோலாகங்சாரில் உள்ள முழு உறைவிடப் பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவ மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) நல்ல முறையில் செயல்பட்டு வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக் இதனைத் தெரிவித்ததுடன், சிசிடிவி காட்சிகள் விசாரணைக்கு உதவும் வகையில் மலேசியக் காவல்துறையிடம் (PDRM) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், உயிரிழந்த மாணவரின் உடற்கூறு பரிசோதனை நாளை காலை 9 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தாம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், விசாரணைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் சில நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் சமூக ஆதரவு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளியின் நிர்வாக நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய, நாளை கல்வி ஆய்வாளர்கள் குழு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விசாரணையின் முடிவில் ஏதேனும் அலட்சியம் அல்லது பாதுகாப்பு நடைமுறை மீறல் உறுதி செய்யப்பட்டால், அதனை கல்வி அமைச்சு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் அவர் எச்சரித்தார்.

அதேவேளை, பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரின் தனியுரிமையை மதித்து, காவல்துறையின் விசாரணைக்கு உரிய அவகாசம் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, மாணவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்த அவர், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள குடும்பத்தினருக்கு மனவலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

Most Popular