
தைவானில் நடைபெற்ற 63ஆவது கோல்டன் ஹார்ஸ் விருது விழாவில், மலேசிய இளம் நடிகர் நந்தகோபால் மோகன் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளார். ‘சயாங் சயாங்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், மலேசியத் திரைப்படத் துறைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த வெற்றி நந்தகோபாலின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; மலேசியக் கலைஞர்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தும் பெருமையான தருணம் என தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங் பாராட்டியுள்ளார்.
நந்தகோபாலுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மலேசிய இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் உட்பட உள்ளூர் திறமையாளர்கள் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை இந்த விருது நிரூபிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இளம் தலைமுறையினர் திரைப்படத் துறையில் நம்பிக்கையுடன் நுழைந்து தரமான படைப்புகளை உருவாக்குவதற்கு இத்தகைய வெற்றிகள் ஊக்கமளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், இதே விருது விழாவில் மலேசியத் திரைப்படக் கலைஞர்களுக்குக் கூடுதல் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. ‘டெட் டைட்’ திரைப்படத்திற்காக கார்த்திக் விஜய் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளார். அதேபோல், ‘கோன் வித் தி டைட்’ பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான விருதைப் பெற்றுள்ளது.
மேலும், ‘நைட் ஜர்னி’ திரைப்படத்திற்காக இயக்குநர் சாய் மிங் லியாங் சிறந்த குறும்பட ஆவணப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
மலேசியத் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவும் இந்தச் சாதனைகளுக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS மூலம், ‘சயாங் சயாங்’ மற்றும் ‘டெட் டைட்’ ஆகிய திரைப்படங்கள் உள்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் RM2.6 மில்லியன் ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளன.
மலேசியத் திரைப்படத் துறையில் திறமையான கலைஞர்களும், சர்வதேச அளவில் சாதிக்கும் ஆற்றலும் அதிகம் இருப்பதை இந்த விருதுகள் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளன.
உள்ளூர் திரைப்படங்களையும், நாட்டின் படைப்பாற்றல் துறையைச் சேர்ந்த கலைஞர்களையும் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும் தியோ நீ சிங் வலியுறுத்தியுள்ளார்.


