Thursday, November 26, 2026
spot_img
HomeBusiness25ஆவது பதிப்பைக் கொண்டாடிய HRD விருதுகள் 2026 – மனிதவள மேம்பாட்டில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள்,...

25ஆவது பதிப்பைக் கொண்டாடிய HRD விருதுகள் 2026 – மனிதவள மேம்பாட்டில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள், பயிற்றுநர்களுக்குக் கௌரவம்!

மலேசியாவின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள் மற்றும் பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் வகையில், 25ஆவது பதிப்பான HRD விருதுகள் 2026 விழா கோலாகலமாக நடைபெற்றது.

மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp), மனிதவள அமைச்சின் (KESUMA) ஆதரவுடன் ஏற்பாடு செய்த இந்த விருது வழங்கும் விழா, நவம்பர் 25ஆம் தேதி கோலாலம்பூர், பங்சார் சவுத் பகுதியில் உள்ள Connexion Conference & Event Centre-இல் நடைபெற்றது.

இவ்விழாவை மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, மலேசியாவின் எதிர்காலத் தொழிலாளர் சக்தியை உருவாக்குவதில் பங்களித்து வரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட HRD விருதுகள், திறமையான பணியாளர்களை உருவாக்குதல், பணியிடக் கற்றலை வலுப்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டுக் கலாசாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அங்கீகரிக்கும் முக்கிய தளமாக விளங்கி வருகிறது.

இந்த 25ஆவது பதிப்பில், மனிதவள மேம்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட உண்மையான தாக்கம், பயிற்சிக்கான நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் அளவிடக்கூடிய பயிற்சி முடிவுகள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மாறிவரும் தொழில்துறை தேவைகளை எதிர்கொள்ள மலேசியர்கள் தேவையான திறன்களுடன் தயாராக இருக்க, தொழிலாளர் திறன் மேம்பாட்டில் தொடர்ச்சியான முதலீடு அவசியம் என வலியுறுத்தினார்.

நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள் மற்றும் பயிற்றுநர்கள் இணைந்து செயல்பட்டால்தான் திறமையான மற்றும் போட்டித்தன்மை கொண்ட தொழிலாளர் சக்தியை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, HRD Corp தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷமீர் அசிஸ் பேசுகையில், தங்களது நிறுவன வளர்ச்சிக்கு இணையாக மனிதவள மேம்பாட்டிலும் முதலீடு செய்யும் நிறுவனங்கள், பயிற்சித் திட்டங்களைத் தாண்டி பொறுப்புடன் செயல்படும் பயிற்சி வழங்குநர்கள் மற்றும் மக்களின் திறமைகளை வெளிக்கொணரும் பயிற்றுநர்கள் ஆகியோரின் பங்களிப்பைப் பாராட்டினார்.

இந்த விருது விழாவில் மொத்தம் 53 விருதுகள் நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.

அவை:

  1. மனிதவள அமைச்சர் விருது (பிளாட்டினம்)
  2. HRD Corp விருது (தங்கம்)
  3. HRD Corp விருது (வெள்ளி)
  4. HRD Corp விருது (வெண்கலம்)

இதில் உயரிய விருதான மனிதவள அமைச்சர் விருது நான்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில், பெரிய நிறுவனப் பிரிவில் CIBA Vision Johor Sdn. Bhd., சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பிரிவில் Above Creative Events (M) Sdn. Bhd., பயிற்சி வழங்குநர் பிரிவில் Spark Activators Sdn. Bhd. மற்றும் பயிற்றுநர் பிரிவில் Karunamoorti Ganthi ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர்.

வெற்றியாளர்கள் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பல கட்டங்களைக் கொண்ட கடுமையான மதிப்பீட்டுச் செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதலாளிகள் சங்கங்கள், அரசாங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் HRD Corp நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் நடுவர்களாகப் பணியாற்றினர்.

இந்நிகழ்வில் KESUMA துணைப் பொதுச்செயலாளர் (செயல்பாடுகள்) சுதேக்னோ அகமது பெலோன், HRD Corp தலைவர் டத்தோ ருஸ்லி ஜஃபார், HRD Corp தலைமை இயக்க அதிகாரி துவான் ஹாஜி அமீர் ஹம்சா ரஹ்மாட், மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் (MEF) தலைவர் துவான் ஹாஜி நிக் முஸ்தபா நிக் முகமது மற்றும் MEF மூத்த ஆலோசகர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மலேசியாவின் மனிதவள மேம்பாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து, பணியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளிக்கும் வகையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்த HRD Corp தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular