Friday, April 17, 2026
HomeFashionஒரு கனவு, ஒரு பயணம், ஒரு பிராண்ட்: யோகாஷ்

ஒரு கனவு, ஒரு பயணம், ஒரு பிராண்ட்: யோகாஷ்

மலேசிய ஃபேஷன் மற்றும் ஸ்டைலிங் துறையில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் யோகாஷ். கிளாசான, ரோயலான ஸ்டைலிங்கிற்காக அறியப்படும் அவர், இன்று பல பிரபலங்களுடனும், மணமகள்களுடனும் பணியாற்றி வருகிறார். ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பயணம் எளிதானது அல்ல.

பினாங்கிலிருந்து தொடங்கிய கனவு
யோகாஷ் என்பவரின் இயற்பெயர் யோகேஸ்வரன். பினாங்கில் பிறந்து வளர்ந்த அவர், பள்ளிப்படிப்பு முழுவதையும் அங்கேயே முடித்தார். 10 வயதிலிருந்தே பேஷன் மற்றும் அழகு உலகில் ஈர்ப்பு ஏற்பட்டதாக அவர் நினைவுகூர்கிறார்.

தொலைக்காட்சியில் ‘இருவர்’ படம் பார்த்தபோது உலக அழகியான ஐஸ்வர்யா ராயை முதன்முறையாக கண்டேன். அப்போதுதான் இந்த உலகம் என்னை ஈர்த்தது,” என்கிறார் யோகாஷ்.

வேறு பாதையில் பயணம்
குடும்ப சூழ்நிலைகளால் பேஷன் டிசைனிங் படிப்பை தொடர முடியாமல், படிவம் ஆறு முடித்த பின்னர் கெடாவில் உள்ள UUM பல்கலைக்கழகத்தில் பிசினஸ் டிகிரி பெற்றார். படிப்பு முடிந்ததும், பினாங்கில் உள்ள Intel நிறுவனத்தில் பணியில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தார்.“நல்ல வேலை, ஆனால் அது என் கனவு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது,” என்று அவர் கூறுகிறார்.

கோலாலம்பூருக்கான மாற்றம்
2013-ஆம் ஆண்டு யோகாஷ் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்து, பேஷன் துறையில் வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். வாரம் வாரமாக KL வந்து networking செய்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அந்த முயற்சிகளின் பலனாக, Miss Universe Malaysia Organization-ல் Resident Stylist மற்றும் Talent Coordinator ஆகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
“ஒரு 10 நாள் assignment தான் முதலில். அதை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். அதுவே என் வாழ்க்கையை மாற்றியது,” என்கிறார் அவர்.

தனித்த பயணம் – Yogash Global
Miss Universe Malaysia-வில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2017-ல் அவர் தனியாக செயல்படத் தொடங்கினார். அதிலிருந்து இன்று வரை Yogash Global என்ற நிறுவனத்தின் மூலம் ஸ்டைலிங் சேவைகளை வழங்கி வருகிறார்.

ஸ்டைலிங் பற்றிய அவரது பார்வை
யோகாஷ் டிரெண்ட்களை பின்பற்றுவதை விட, தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்குவதில் நம்பிக்கை வைக்கிறார்.
“டிரெண்டை ஃபாலோ பண்ணாதீங்க. டிரெண்டை செட் பண்ணுங்க. எந்த ஸ்டைலிங்கிலும் கம்ஃபர்ட் தான் முக்கியம்,” என்கிறார் அவர்.

மணமகள்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருடனும் அவர் பணியாற்றுகிறார். விலை நிர்ணயம் நிரந்தரம் அல்ல; வேலை, தேவைகள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

எதிர்மறை கருத்துகளை எதிர்கொள்வது
ஆரம்ப காலத்தில், ஆண் ஒருவர் பெண்களை ஸ்டைல் செய்வது குறித்து பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன.

“இந்த துறை முழுக்க சப்ஜெக்டிவ். எல்லாருக்கும் ஒரே கருத்து இருக்காது. வேலை பற்றி பேசினால் ஏற்றுக்கொள்கிறேன்; தனிப்பட்ட விமர்சனங்களுக்கு நான் இடம் தர மாட்டேன்,” என்கிறார் அவர்.

இன்னும் நிறைவேறாத கனவு
பல பிரபலங்களுடன் பணியாற்றியிருந்தாலும், யோகாஷின் ஒரு கனவு இன்னும் நிறைவேறவில்லை.
“ஒரு நாள் ஐஸ்வர்யா ராயை ஸ்டைல் பண்ணணும். 10 வயசுல ஆரம்பிச்ச கனவு அது,” என்று சிரித்தபடி கூறுகிறார்.

இளம் தலைமுறைக்கு செய்தி
இளம் தலைமுறைக்கு அவர் சொல்லும் செய்தி எளிமையானது:“வாய்ப்பு கிடைக்கலைன்னு வருத்தப்படாதீங்க. நல்ல வேலை மட்டும் தொடர்ந்து காட்டுங்க. சரியான நேரத்துல கதவுகள் தானா திறக்கும்.”

RELATED ARTICLES

Most Popular