Thursday, September 10, 2026
spot_img
HomeBusinessமின்னல் FM-இல் மீண்டும் ஒலிக்கும் ‘கலப்படம்’ – உள்ளூர் இந்தியக் கலைஞர்களுக்கு புதிய மேடை

மின்னல் FM-இல் மீண்டும் ஒலிக்கும் ‘கலப்படம்’ – உள்ளூர் இந்தியக் கலைஞர்களுக்கு புதிய மேடை

ஒருகாலத்தில் மலேசிய இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்த மின்னல் FM-இன் ‘கலப்படம்’ நிகழ்ச்சி, மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. இந்த முயற்சி, உள்ளூர் இந்தியக் கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் மேலும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என்று தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங்தெரிவித்துள்ளார்.

கூலாயில் நடைபெற்ற ‘கலப்படம்’ முன்னோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்தியக் கலைஞர்கள் மற்றும் கலை அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மீண்டும் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.

“இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று பல இந்தியக் கலைஞர்களும் சங்கங்களும் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் கலைத் திறமையை மக்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு சிறந்த தளமாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக கூலாய் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு இடங்களில் இதேபோன்ற முன்னோடி நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தால், அடுத்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் இந்த நிகழ்ச்சியை விரிவுபடுத்தும் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே நிகழ்வில், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (FINAS) சார்பில் செயல்படுத்தப்படும் ‘மடானி கலைஞர் நலத் திட்டம்’ மூலம் ஜொகூரைச் சேர்ந்த ஐந்து இந்தியக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

2023-ஆம் ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 183 கலைஞர்கள் பயனடைந்துள்ளதுடன், RM144,900 மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. படைப்பாற்றல் துறையில் பங்களித்து வரும் கலைஞர்களின் நலனை பாதுகாக்க மடானி அரசாங்கம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக தியோ நீ சிங் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular