
பொதுச் சேவைத் துறையில் பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நிலவரப்படி அது 60.41 விழுக்காட்டை எட்டியுள்ளதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
அதேவேளையில், பொதுச் சேவையின் உயர் நிர்வாகப் பதவிகளில் பெண்களின் பங்கேற்பும் 39.96 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 2024ஆம் ஆண்டு பதிவான 39.32 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார்.

“இந்தப் புள்ளிவிவரங்களில் சீருடைப் பணியாளர்கள் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், தொடர்பு அமைச்சிலும் பெண்களின் பங்கேற்பு சிறப்பாக உள்ளது.
“INSPIREHER கருத்தரங்கின் மூலம் மேலும் அதிகமான பெண் அரசுப் பணியாளர்களுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, பணியில் தொடர்ந்து முன்னேறுவதற்கான ஊக்கத்தை வழங்க முடியும் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் நிறுவனமான (IBTAR) ஏற்பாட்டில் நடைபெற்ற INSPIREHER கருத்தரங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே தியோ இவ்வாறு தெரிவித்தார். இக்கருத்தரங்கில் 50 பெண் அரசுப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
தொடர்பு அமைச்சிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம்
தொடர்பு அமைச்சின் மொத்த பணியாளர்களில் பெண்கள் 44 விழுக்காடு உள்ளதாக தியோ தெரிவித்தார்.
அதில் சமூகத் தொடர்புத் துறையில் பெண்களின் பங்கேற்பு 57 விழுக்காடாகவும், IBTAR-இல் 56 விழுக்காடாகவும், மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவில் 54 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது.
இது பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
AI திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிப்பு
இதனிடையே, தேசிய தகவல் தொடர்பு மையமான NADI மூலம் முன்னெடுக்கப்படும் AI@NADI திட்டம் கடந்த ஜூன் மாதம் நாடு முழுவதும் உள்ள 1,099 NADI மையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 25,000 பங்கேற்புகளை பதிவு செய்வது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 20,044 பங்கேற்புகள் பதிவாகியுள்ளன.
“தற்போது 1,247 பேர் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டளைப் பொறியாளர் பயிற்சியின் பல்வேறு நிலைகளில் பங்கேற்று வருகின்றனர். அவர்களில் 856 பேர் அல்லது 69 விழுக்காட்டினர் பெண்கள்,” என்றார்.
ஒவ்வொரு NADI மையத்திலும் குறைந்தது ஒருவரை AI கட்டளைப் பொறியாளராக உருவாக்குவதன் மூலம், சமூக மட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் தியோ தெரிவித்தார்.
பெண்களின் பங்கேற்பு அரசுத் துறைகளில் மட்டுமின்றி, AI மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.


