Friday, November 20, 2026
spot_img
HomeBusinessகுடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைக்காக டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது – தியோ நீ...

குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைக்காக டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது – தியோ நீ சிங்

கோலாலம்பூர்: குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக முன்னாள் கூட்டரசு நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் மேற்கொண்ட துணிச்சலான முயற்சிகளையும், முக்கிய நீதிமன்ற வழக்குகளில் அவர் வெளிப்படுத்திய உறுதியான நிலைப்பாட்டையும் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஒரு தாயாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தனக்கு, டான்ஸ்ரீ நளினியின் நீதித்துறைப் பங்களிப்புகள் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற CTEB & Anor v. தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர் வழக்கில் டான்ஸ்ரீ நளினி வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தியோ சுட்டிக்காட்டினார். கூட்டரசு அரசியலமைப்பில் உள்ள ‘தந்தை’ என்ற சொல்லின் விளக்கம், உயிரியல் ரீதியான தந்தை உறவு மற்றும் பெற்றோரின் திருமண நிலை ஆகியவை தொடர்பான குடியுரிமை அம்சங்கள் இவ்வழக்கில் ஆராயப்பட்டன.

அதேபோல், 2021ஆம் ஆண்டின் CCH & Anor v. பிறப்பு மற்றும் இறப்பு பதிவுத் துறை தலைமைப் பதிவாளர் வழக்கிலும், மலேசியத் தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் குடியுரிமையை அங்கீகரிப்பதில் நீதிமன்றம் எடுத்த நிலைப்பாட்டையும் அவர் நினைவுகூர்ந்தார்.

டான்ஸ்ரீ நளினியை அண்மையில் நேரில் சந்தித்தபோது, அவரது பணிகள் தமக்கு அளித்துள்ள உத்வேகம் குறித்து பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்த தியோ, குடியுரிமையற்ற குழந்தைகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் அவரது கொள்கை உறுதியும் துணிச்சலும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குவதாகக் கூறினார்.

கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ, தனது முகநூல் பதிவில் இதனைத் தெரிவித்ததுடன், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதோடு, குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் மலேசிய ஊடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular