Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessமலாக்காவுக்கு நேர்மையான, அர்ப்பணிப்புமிக்க தலைமைத்துவம் தேவை – அன்வார் இப்ராஹிம்

மலாக்காவுக்கு நேர்மையான, அர்ப்பணிப்புமிக்க தலைமைத்துவம் தேவை – அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்: மலாக்கா மாநில மக்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் முன்னிறுத்தி, நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய தலைமைத்துவமே மாநிலத்திற்குத் தேவை என பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில், மக்களின் நலனுக்காகச் செயல்படுவதுடன், உண்மையான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

“மலாக்கா மாநிலத்திற்கு நேர்மையான, ஒருமைப்பாடு கொண்ட, மக்களின் நலனுக்காகக் கடினமாக உழைக்கக்கூடிய தலைமைத்துவம் தேவை.

“மலாக்கா மக்களின் நன்மைக்காகவும், அவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றங்களைக் கொண்டுவரவும் பாடுபடும் ஹராப்பான் வேட்பாளர்களை மாநில மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன். மலாக்கா நமது இல்லம்!” என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தனது முகநூல் பதிவின் வாயிலாக அன்வார் பகிர்ந்துகொண்டார்.

இம்முறை நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அவற்றில் பிகேஆர் கட்சி 10 வேட்பாளர்களையும், ஜனநாயகச் செயல் கட்சி (DAP) மற்றும் தேசிய நம்பிக்கைக் கட்சி (AMANAH) ஆகியவை தலா ஏழு வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளன.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular