
ஊடக அடையாள அட்டை வழங்கும் நடைமுறையுடன் மருத்துவப் பரிசோதனையையும் ஊக்குவிக்கும் வழிமுறைகளை ஆராயுமாறு மலேசிய ஊடக மன்றத்திற்கு (MMC) தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 1 – ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றுபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

ஊடக அடையாள அட்டைகளை ஆண்டுதோறும் வழங்கும் நடைமுறையின்போது, ஊடகவியலாளர்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து மலேசிய ஊடக மன்றம் ஆராய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும், மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், ஊடகத் துறையினர் தங்களது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஊக்குவிப்பதே முக்கிய நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் சுமார் 12,000 ஊடகத் துறையினர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் அதிகமானோர் இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான மலேசிய ஊடக மன்றத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, Cardiac Vascular Sentral Kuala Lumpur (CVSKL) அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மலேசிய ஊடக மன்றம் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என்றும் ஃபஹ்மி கூறினார்.
குறிப்பாக, சில மருத்துவ வசதிகள் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டுமே கிடைத்தால், சபா, சரவாக் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், ஊடகவியலாளர்களின் உடல்நலப் பாதுகாப்பை முக்கியமான விவகாரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், தொற்றா நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் உரிய நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்க முடியும் என்றார்.
இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்காக ECM Libra அறக்கட்டளை, CVSKL அறக்கட்டளைக்கு RM1 மில்லியன் நிதி வழங்கியுள்ளது. இந்த நிதி, தற்போது பணியாற்றும் மற்றும் முன்னாள் ஊடகவியலாளர்களுக்கான தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்பாராத உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என்றும் ஃபஹ்மி மேலும் வலியுறுத்தினார்.


