
இன்று காலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் N15 பெண்காலான் பாத்து சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜெய்சன் (Jason Tze-Xi Nathan) மற்றும் புக்கிட் காடில் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஆட்லி ஜஹாரி (YB Adly Zahari) ஆகியோர் கலந்துகொண்டு, எதிர்வரும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

இதில் உரையாற்றிய ஜெய்சன், பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் நேர்ந்த ஊழல் சம்பவங்கள் தமக்குப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். அந்த அனுபவமே சட்டக் கல்வியைத் தொடர்ந்து பயிலவும், பின்னர் அரசியல் மற்றும் மக்கள் சேவையில் ஈடுபடவும் தமக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
மலாக்காவைச் சேர்ந்தவரான ஜெய்சன், நீண்டகாலமாகத் தமது குழுவினருடன் இணைந்து பெண்காலான் பாத்து தொகுதி மக்களுக்குப் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறார்.
வழக்கறிஞர் தொழிலில் சிறந்த வருமானத்தையும் நிலையான எதிர்காலத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், தனிப்பட்ட முன்னேற்றத்தைவிட மக்கள் நலனுக்கும் நாட்டின் மாற்றத்திற்கும் பங்களிப்பதே முக்கியம் எனக் கருதி அரசியலைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் தொகுதி மக்கள் தமக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், சட்டமன்றத்தில் பெண்காலான் பாத்து மக்களின் உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் குரல் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பொறுப்புடன் கண்காணித்து, மக்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவதற்குத் தமக்கு ஒரு வாய்ப்பளிக்குமாறும் வாக்காளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


