Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessதீபாவளியை முன்னிட்டு ETS ரயில் டிக்கெட் விற்பனை 108 சதவீதத்தை எட்டியது – KTMB

தீபாவளியை முன்னிட்டு ETS ரயில் டிக்கெட் விற்பனை 108 சதவீதத்தை எட்டியது – KTMB

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மலேசிய ரயில்வே நிறுவனமான கெரெத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (KTMB), ETS மற்றும் EMUPlus ரயில் சேவைகளுக்கான டிக்கெட் விற்பனையில் 108 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.

நவம்பர் 5 முதல் 10ஆம் தேதி வரையிலான பயணங்களுக்காக வழங்கப்பட்ட மொத்தம் 96,752 இருக்கைகளுக்கு எதிராக, இதுவரை 100,304 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு டிக்கெட் விற்பனை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக KTMB குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஸ்லான் ஷா அல் பக்ரி தெரிவித்தார்.

கோலாலம்பூர் சென்ட்ரல் (KL Sentral) ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய ஒற்றுமைத் துணை அமைச்சர் மாண்புமிகு யுனேஸ்வரன் ராமராஜ் அவர்களுடன் இணைந்து, ETS பயணிகளுக்கு 600 தீபாவளி நினைவுப் பரிசுப் பொதிகளை வழங்கிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, KTMB தயாரித்திருந்த தீபாவளி சிறப்பு காணொளியும் திரையிடப்பட்டது. பல இன மக்கள் வாழும் மலேசியாவில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை உணர்வை வலியுறுத்தும் வகையில் இந்தக் காணொளி அமைந்திருந்தது.

பயணிகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஏற்கெனவே ETS மற்றும் EMUPlus சேவைகள் மூலம் கூடுதலாக 14,384 இருக்கைகளை KTMB அறிவித்திருந்தது.

2027ஆம் ஆண்டுக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான ETS மற்றும் ERT ரயில் சேவைகளின் டிக்கெட் விற்பனையையும் KTMB இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியுள்ளது.

2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 1.57 மில்லியன் இருக்கைகள் பயணிகளுக்காக வழங்கப்படவுள்ளன.

மேலும், கூடுதலாக வழங்கப்பட்ட 96,752 இருக்கைகளுக்கு எதிராக இதுவரை 102,819 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது 106 சதவீத விற்பனைப் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பண்டிகைக் காலத்தில் சிரமமின்றிப் பயணம் செய்வதற்காக பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, KTMB-யின் அதிகாரப்பூர்வ விற்பனை வழிகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே நிலையத்தை வந்தடையுமாறும் KTMB பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular