
மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் இளம் தலைமுறையினருக்கு அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என பி.கே.ஆர். மலாக்கா மாநிலத் தலைமை மன்றத்தின் இடைக்காலத் தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் வலியுறுத்தியுள்ளார்.
இளம் வேட்பாளர்களுக்கு தேர்தல் களத்தில் வாய்ப்பளிப்பதன் மூலம், அவர்கள் அரசியல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் எதிர்காலத்தில் நாட்டின் தலைவர்களாக உருவாகவும் வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தானியங்கி வாக்காளர் பதிவு மற்றும் 18 வயதிலிருந்து வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகச் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு வாக்காளர்களாக மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகளாகவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இளம் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் கட்சிக்குள் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு அல்லது தலைமைத்துவத்துடனான நெருக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்றும், பல்வேறு சமூகப் பின்னணிகளைச் சேர்ந்த மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆற்றலே முக்கிய அளவுகோலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்களைத் தேர்தல் காலங்களில் கொடிகள் கட்டுவது, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற அடிமட்டப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாறாக, தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் தலைமைத்துவத் திறனையும் மக்கள் சேவை செய்யும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்கான களத்தை உருவாக்க வேண்டும் என அடாம் அட்லி தெரிவித்தார்.
இளைஞர்கள் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பவர்களாக மட்டுமல்லாமல், எதிர்கால அரசியல் முடிவுகளை எடுக்கும் மக்கள் பிரதிநிதிகளாகவும் உருவாக வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தலாக அமைந்துள்ளது.


