
மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூய்மையான, வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் மூன்று முக்கியக் கொள்கைகள் மற்றும் 12 மக்கள் நல இலக்குகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்டுள்ளது.
‘மலாக்கா நமது இல்லம்’ (Melaka Rumah Kita) என்ற கருப்பொருளில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கை, மக்கள் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ‘சக்காவ்’ கலாசாரத்தை ஒழித்து, பொறுப்பான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
பக்காத்தான் ஹராப்பானின் மலாக்கா மாநிலத் தலைவர் அட்லி ஸஹாரி தலைமையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், உயர்கல்வி துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் மற்றும் மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ பொயே தியோங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூன்று முக்கியக் கொள்கைகள்
தேர்தல் அறிக்கையின் முதல் முக்கியக் கொள்கையாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘ஸ்மார்ட் மலாக்கா’ உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கச் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும், வெளிப்படையாகவும் மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கொள்கையின்படி, உள்ளாட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணிகளில் 30 விழுக்காட்டை இளைஞர்களுக்கு ஒதுக்கி, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் தொழில்முனைவுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கொள்கையாக, 2032ஆம் ஆண்டுக்குள் 25 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை மலாக்காவுக்கு ஈர்ப்பதன் மூலம் மாநிலத்தை முக்கியமான அனைத்துலகச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
12 மக்கள் நல இலக்குகள்
இதுதவிர, மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வீடமைப்பு, தரமான வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம், போக்குவரத்து வசதிகள், சமய நிறுவனங்களின் வளர்ச்சி, நில உரிமை, மக்கள் நலன் மற்றும் சமூக ஒற்றுமை உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்தல் அறிக்கை அரசியல் வாக்குறுதிகளின் தொகுப்பாக மட்டுமல்லாமல், மலாக்கா மக்களின் கருத்துகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அட்லி ஸஹாரி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட இந்தத் தேர்தல் அறிக்கை, 16ஆவது மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.


