
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் உள்ள 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மொத்தம் RM1.1 பில்லியன் மதிப்பிலான எஸ்டிஆர் (STR) உதவித்தொகை இன்று முதல் வழங்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், இந்த உதவித்தொகை நவம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக வழங்கப்படும்.
இனம், மதம் பாராமல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகள் இந்த உதவித்தொகையின் மூலம் பயனடைவார்கள் எனப் பிரதமர் தெரிவித்தார்.

குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற தீபாவளி மெகா சந்தை நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீபாவளிக் கொண்டாட்ட காலத்தில் மக்களின் குடும்பச் செலவுகளுக்கு இந்த STR உதவித்தொகை ஓரளவு நிதி நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


