
மலேசியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இரு நாடுகளும் ஏழு முக்கிய ஒத்துழைப்பு ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டன.
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனை (Emmanuel Macron), பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்தில் வரவேற்றார்.

பிரான்ஸ் அதிபராக பதவியேற்ற பின்னர் மக்ரோன் மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும்.
இதன்போது, இராணுவ மரியாதை அணிவகுப்பு உள்ளிட்ட உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்தில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நாட்டின் வரலாற்று மற்றும் தேசியக் கட்டமைப்புப் பயணத்தை நினைவுகூரும் வகையில் அமைந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது, மலேசியா – பிரான்ஸ் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, தற்போதைய புவிசார் அரசியல் நிலவரங்கள், பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் உள்ளிட்ட இரு நாடுகளின் பொதுவான நலன்கள் தொடர்பான அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இந்தச் சந்திப்பின் முக்கிய விளைவாக, எரிசக்தி மாற்றம், முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்கள், பாதுகாப்பு, தற்காப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கிய ஏழு ஒத்துழைப்பு ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பரிமாறிக்கொள்ளப்பட்ட ஏழு ஒத்துழைப்பு ஆவணங்கள் வருமாறு:
1. எரிசக்தி மாற்றத்திற்கான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU).
2. முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்கள் தொடர்பான ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. இருதரப்பு தற்காப்புத் திறன்கள் மற்றும் தற்காப்புத் தொழில்துறை ஒத்துழைப்புக்கான செயல்திட்ட வழிகாட்டி.
4. தற்காப்பு ஒத்துழைப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம்.
5. கலப்பின அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பிராந்திய மையத்தை உருவாக்கும் நோக்கிலான விருப்பக் கடிதம் (LoI).
6. மலேசிய ராயல் விமானப்படையின் (TUDM) முதல்கட்ட போர் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் கொள்முதல் தொடர்பான விருப்பக் கடிதம்.
7. SALAM திட்டத்தின் மேம்பாடு மற்றும் செயல்படுத்தலுக்கான மூலோபாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இந்த ஏழு ஆவணங்களின் பரிமாற்றம், உயர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுடன், மூலோபாயத் திறன்களை மேம்படுத்தவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய நகர்வாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.


