
மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கமான MATTA, செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை கோலாலம்பூர் MITEC-ல் நடைபெறவுள்ள தேசிய MATTA Fair செப்டம்பர் 2026 கண்காட்சியின் அனைத்துலக விருப்பமான சுற்றுலாத் தலமாக தைவானை அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜூலை தொடக்கத்தில் 3.4% அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 59ஆவது பதிப்பாக நடைபெறும் இக்கண்காட்சி, தைவானை முன்னணி அனைத்துலக சுற்றுலாத் தலமாக முன்னிறுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவையும் ஊக்குவிக்கிறது.
2025ஆம் ஆண்டில் தைவான் 8.575 மில்லியன் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9.1% அதிகமாகும். பிராந்தியத்தில் தைவானுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக மலேசியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 424,094 மலேசியர்கள் தைவானுக்கு பயணம் செய்துள்ளனர்.
அதேவேளை, 2025ஆம் ஆண்டில் 390,000க்கும் மேற்பட்ட தைவான் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர். 2026 Mastercard-CrescentRating Global Muslim Travel Index-ல், OIC அல்லாத நாடுகளில் முஸ்லிம் பயணிகளுக்கான சுற்றுலா நட்பு நாடுகளின் பட்டியலில் மலேசியா 3ஆவது இடத்திலும் உள்ளது.
MATTA தலைவர் நைகல் வோங் கூறுகையில், மலேசியா–தைவான் இடையிலான பயணிகள் பரிமாற்றம் தொடர்ந்து வலுவாக இருப்பது, இருதரப்பு சுற்றுலாத் துறையும் ஆரோக்கியமான வளர்ச்சியில் இருப்பதை வெளிப்படுத்துகிறது என்றார்.
தைவான் சுற்றுலா நிர்வாகத்தின் கோலாலம்பூர் அலுவலக இயக்குநர் அபே சோ கூறுகையில், மலேசியா தைவானுக்கான முக்கியமான மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் சுற்றுலா சந்தையாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு தைவான் தனது “Taiwan – Waves of Wonder” என்ற கருப்பொருளின் கீழ் பங்கேற்கிறது. கலாசாரம், உணவு, இயற்கை மற்றும் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அனுபவங்களை மலேசியர்கள் கண்டறிய இந்த முயற்சி ஊக்கமளிக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், மலேசிய முஸ்லிம் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, நான்கு மலேசிய பயண நிறுவனங்கள் தைவான் அரங்கில் சிறப்பு முஸ்லிம் நட்பு சுற்றுலா தொகுப்புகளுடன் பங்கேற்கின்றன. இதன் மூலம் மலேசியா–தைவான் இடையிலான இருவழி சுற்றுலாவை மேலும் வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2,026 அரங்குகள் – 285 நிறுவனங்கள்
செப்டம்பர் 2026 MATTA Fair, மொத்தம் 10 கண்காட்சி அரங்குகளில், 40,820 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் நடைபெறுகிறது. இம்முறை 285 நிறுவனங்கள் பங்கேற்று 2,026 அரங்குகளை அமைக்கின்றன.
தைவானின் “Waves of Wonder” அனுபவத்தை பார்வையாளர்கள் Level 3 International Hall பகுதியில் நடைபெறும் தைவான் அரங்கில் காணலாம்.
கண்காட்சிக்கு அனுமதி இலவசம். செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை MATTA Fair நடைபெறும்.
KL Sentral மற்றும் Sunway Putra Mall ஆகிய இடங்களிலிருந்து MITEC-க்கு இலவச shuttle சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரில் வருபவர்களுக்காக வாகன நிறுத்துமிட வசதிகளும் உள்ளன.


