Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessPLKN 3.0: இளைஞர்களிடையே இன வேற்றுமைகளை மதித்து தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் தளம்

PLKN 3.0: இளைஞர்களிடையே இன வேற்றுமைகளை மதித்து தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் தளம்

நாட்டின் இளைஞர்கள் இன வேற்றுமைகளை மதித்து, அவற்றை தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் சக்தியாகப் பயன்படுத்துவதற்கு தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் (PLKN) 3.0 முக்கிய தளமாக விளங்குவதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பன்முக இனச் சமூகத்தைப் பிரிவினைக்கான காரணியாகப் பார்க்காமல், நாட்டின் பலமாக மாற்ற வேண்டும் என்றும், குறிப்பாகப் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்களை உருவாக்குவதற்கு இந்தப் பன்முகத்தன்மை வாய்ப்பளிப்பதாகவும் அவர் கூறினார்.

“எனவே, பன்முகத்தன்மையைக் கொண்டாட வேண்டும். அதன் மூலம் புத்தாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பில் பல சாதனைகளை உருவாக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள 515 ஆவது பிராந்திய இராணுவப் படைப்பிரிவு முகாமில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான PLKN 3.0 நான்காவது தொடர் இளம் வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

PLKN பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்கள், உயர்கல்வியைத் தொடரும்போதும், வேலைவாய்ப்புத் துறையில் நுழையும்போதும் அல்லது ஏனைய துறைகளில் ஈடுபடும்போதும் இந்த ஒற்றுமை உணர்வைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இவ்வாண்டின் இறுதித் தொடரில் நாடு முழுவதும் மொத்தம் 1,899 இளம் வீரர்கள் PLKN பயிற்சியில் பங்கேற்றுள்ளதாகவும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 1,860 பயிற்சியாளர்களை இலக்காகக் கொண்டிருந்த நிலையில், 102 விழுக்காடு பங்கேற்புடன் சிறப்பான சாதனை பதிவாகியுள்ளது. இதில் 1,149 ஆண் பயிற்சியாளர்களும் 750 பெண் பயிற்சியாளர்களும் அடங்குவர்.

இவர்கள் நாடு முழுவதும் உள்ள ஆறு தேசிய சேவைப் பயிற்சிக் கிளைகளிலும், மலேசியத் தன்னார்வப் படையான RELA-வின் இரண்டு பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்றதாக அவர் தெரிவித்தார்.

PLKN திட்டம் இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்திப் போரிடுவதற்கான பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதல்ல என்று குறிப்பிட்ட அவர், தேசப்பற்று, நாட்டின் மீதான அன்பு மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்புணர்வை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றார்.

“இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதில் ஈடுபட வேண்டும் என்பது இதன் நோக்கமல்ல. மாறாக, அவர்களிடம் தேசப்பற்றும் நாட்டின் மீதான அன்பும் இருக்க வேண்டும். திறந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும், சகிப்புத்தன்மையுடனும், உணர்ச்சிவசப்படாமல் சமூகப் பிளவுகளைத் தூண்டாத தலைமுறையாகவும் அவர்கள் உருவாக வேண்டும்,” என்றார்.

மேலும், மலேசியா அனுபவித்து வரும் சுதந்திரம், அமைதி மற்றும் செழிப்பை இளைஞர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.

“நமது தாய்நாடு நமது கௌரவம். எந்த வழியிலாவது அதனைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். நாட்டின் எதிர்காலத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம். இந்தப் பொறுப்பை நேர்மையுடனும் பெருமிதத்துடனும் ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹக்கிம் அலி மற்றும் தேசிய சேவைப் பயிற்சித் துறையின் (JLKN) தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டத்தோ மர்சுகி மொக்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Most Popular